search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் தன்னார்வலருக்கு பாதிப்பு ஏற்பட்டதில் தடுப்பூசிக்கு தொடர்பு இல்லை - இந்திய சீரம் நிறுவனம் அறிவிப்பு

    சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும், தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்று இந்திய சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இதை ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் புனேயில் இருக்கிற இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து, அதன் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்தி வருகிறது. இந்த மருத்துவ பரிசோதனையில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த 40 வயது தன்னார்வலருக்கு கடுமையான நரம்பு மற்றும் உளவியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

    இதுதொடர்பாக அவர் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டும், இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை, தயாரிப்பு, வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுபற்றி டெல்லியில் உள்ள தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரும், மருத்துவ பரிசோதனை தளத்தில் உள்ள நிறுவன நெறிமுறைக்குழுவினரும் விசாரணை நடத்துகிறார்கள்.

    ஆனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கும், தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்று இந்திய சீரம் நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது. இதையொட்டி தனது வலைத்தள பக்கத்தில் அந்த நிறுவனம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    எங்கள் தடுப்பூசி நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது, பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்படாதவரையில், மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படாது என்பதை அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறோம். சென்னை தன்னார்வலர் ஒருவருக்கு ஏற்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இது தடுப்பூசியால் நேர்ந்தது இல்லை. அவரது நிலை குறித்து சீரம் நிறுவனம் கரிசனை கொண்டுள்ளது.

    தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் பற்றிய சிக்கல்கள் மற்றும் ஏற்கனவே உள்ள தவறான பெயரை கருத்தில் கொண்டு, நியாயமற்ற முறையில் சேதப்படுத்தப்பட்டிருக்கும் எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை பாதுகாக்க சென்னை தன்னார்வலருக்கு சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    தேவையான அனைத்து ஒழுங்குமுறை மற்றும் நெறிமுறை செயல்முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் விடாமுயற்சியுடன், கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன. இதுபற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், தரவு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் (டி.எஸ்.எம்.பி.) மற்றும் நெறிமுறைக்குழுவுக்கும் விளக்கம் அனுப்பப்பட்டுள்ளது. நடந்த சம்பவம், தடுப்பூசி பரிசோதனைக்கு சம்மந்தம் இல்லாத பிரச்சினை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×