search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் கமிஷன்
    X
    தேர்தல் கமிஷன்

    வெளிநாட்டு இந்தியர்களுக்கு தபால் ஓட்டு - தமிழக சட்டசபை தேர்தலில் அமல்?

    வெளிநாட்டு இந்தியர்களுக்கு தபால் ஓட்டு போடும் உரிமையை வழங்க சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இது தமிழக சட்டசபை தேர்தலில் அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது.
    புதுடெல்லி:

    தமிழகம், அசாம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு போட வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    அதன்படி, வெளிநாட்டு இந்தியர்கள், தபால் ஓட்டு போட வாய்ப்பு தரலாம் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்து கடந்த 27-ந்தேதி கடிதம் எழுதி உள்ளது.

    அதில் மேலும் கூறி இருப்பதாவது:-

    தமிழகம், அசாம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-ஜூனில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஓட்டு போடுவதற்காக வெளிநாட்டு இந்தியர்கள் இங்கு வந்து செல்வது அதிக செலவு பிடிக்கும் நடவடிக்கை; அதுமட்டுமல்லாமல், வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் பிற ஈடுபாடுகளின் காரணமாக வசித்து வருகிற நாட்டை விட்டு வெளியேற முடியாது. இதனால் தபால் ஓட்டு போடும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை வந்துள்ளது.

    தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று பிரச்சினை, நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளது.

    மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 62, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்கு அளிக்கும் உரிமையை வழங்கி உள்ளது. எனவே தகுதிவாய்ந்த அனைத்து வாக்காளர்களிடம் இருந்தும் வாக்கு அளிக்கும் உரிமையை பயன்படுத்துவதற்கு அனைத்து வழிகளையும் ஆராய வேண்டியது அவசியம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தபால் ஓட்டு என்று அழைக்கப்பட்டாலும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு ‘இ.டி.பி.பீ.எஸ்.’ என்று அழைக்கப்படுகிற மின்னணு வழி தபால் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றவும் தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்த முறை ஏற்கனவே இந்தியாவில் அரசு பணியாளர்களுக்கு, பாதுகாப்பு படையினருக்கு, போலீஸ் படையினருக்கு வெற்றிகரமாக இந்த தபால் வாக்கு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இதை வெளிநாட்டு இந்தியர்களுக்கு விரிவுபடுத்த வசதியாக 1961-ம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதிகளில் தேவையான திருத்தங்களை செய்யவும் தேர்தல் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

    வெளிநாட்டு இந்தியர்களின் வாக்குரிமைய பயன்படுத்துவதற்கு உதவுவதோடு மட்டுமின்றி, சர்வதேச அளவில் நாட்டின் பிம்பத்தை மேலும் உயர்த்துவதற்கு இது உதவும் என்பதால் தேர்தல் நடத்தை விதிகளை திருத்துவதற்கு விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளவும் தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.

    எனவே தமிழக சட்டசபை தேர்தலில் வெளிநாட்டில் வாழும் தகுதிவாய்ந்த தமிழர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் உரிமை அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள வெளிநாட்டு இந்தியர்கள் தேர்தலில் ஓட்டு போடுவதற்கு, தேர்தல் அறிவிப்பு வந்த 5 நாளில் தங்கள் விருப்பத்தை தேர்தல் அதிகாரிக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அவருக்கு மின்னஞ்சல் (இமெயில்) மூலம் வாக்குச்சீட்டு அனுப்பப்படும். அவர் அதை பதிவிறக்கம் செய்து ஓட்டு போட்டு, அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரியின் உறுதிமொழி பத்திரத்துடன் திருப்பி அனுப்ப வேண்டும் என தெரிகிறது.
    Next Story
    ×