search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் தீவிபத்து தடுப்பு நடவடிக்கை - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

    அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் தீவிபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
    புதுடெல்லி:

    சமீபத்தில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஒரு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் நடந்த தீவிபத்தில் 6 கொரோனா நோயாளிகள் பலியானார்கள். ஆமதாபாத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் நடந்த தீவிபத்தில் 8 பேர் பலியானார்கள்.

    இந்த பின்னணியில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஆஸ்பத்திரிகளில் தீவிபத்து சம்பவங்கள் அடிக்கடி நடப்பதும், தீவிபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் மிகுந்த கவலைக்குரியது.

    குஜராத் மாநிலத்தில் 2 ஆஸ்பத்திரிகளில் நடந்த தீவிபத்துகளில் 14 பேர் பலியாகி உள்ளனர்.

    கொரோனாவுக்கு எதிராக நாடு போராடிக் கொண்டிருக்கும்போது, இதுபோன்ற தீவிபத்துகள் மீண்டும் நடைபெறுவதை தடுக்க மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    எனவே, அனைத்து ஆஸ்பத்திரிகள் மற்றும் நர்சிங் ஹோம்களில் தீவிபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

    அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் தீவிபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? தப்பிக்கும் வழிகள் உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள தீயணைப்பு துறை தலைமை இயக்குனர் அவ்வப்போது இதுதொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகிறார். அதைப் பின்பற்றி ஆஸ்பத்திரிகள் உள்பட அனைத்து கட்டிடங்களிலும் தீவிபத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்து வருகிறது.

    இந்த அறிவுறுத்தல்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வையுங்கள்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×