search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றிய விவசாயிகள்
    X
    போலீசார் தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றிய விவசாயிகள்

    போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம்

    டெல்லி எல்லையில் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 5-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

    டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலஙகளை சேர்ந்த விவசாயிகள் அரியானா-டெல்லி எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

    அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். 

    ஆனால், அரியானா-டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி செல்லும் வழியான காசியாபாத் எல்லையிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைற்கிடையில், சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக்கின் பிறந்தநாள் இன்று. இதை ஒவ்வொரு ஆண்டும் குருநானக் ஜெயந்தி என்று சீக்கியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்த ஆண்டு இன்று குருநானக் ஜெயந்தி என்பதால் டெல்லி எல்லையில் போராட்ட களத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் காலை பிரார்த்தனை செய்தனர்.

    இந்நிலையில், டெல்லி எல்லையில் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், சீக்கிய மதகுரு குருநானக்கின் புகைப்படத்தை வைத்து அதை சுற்றியும் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து வழிபட்டனர்.

    ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகள் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் ஏற்றப்பட்டுள்ளது. இந்த மெழுகுவர்த்தி ஏற்றும் போராட்டத்தால் டெல்லி எல்லையான டிக்ரி, சிங்கு மற்றும் காசியாபாத் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
    Next Story
    ×