search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் ராவத்
    X
    சஞ்சய் ராவத்

    மல்லிகார்ஜுன கார்கே, சரத்பவார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது: சஞ்சய் ராவத்

    சட்டசபை சபாநாயகர் பதவிக்காக மல்லிகார்ஜுன கார்கே, சரத்பவார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.
    மும்பை :

    மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி இயற்கைக்கு மாறானது என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். மேலும் அவர் இந்த ஆட்சி கவிழ்ந்தவுடன் பா.ஜனதா நிலையான ஆட்சியை வழங்கும் எனவும் தெரிவித்து இருந்தார்.

    தேவேந்திர பட்னாவிசின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சஞ்சய் ராவத் எம்.பி. சாம்னாவில் கட்டுரை எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அரசியலில் யாரும் துறவி இல்லை. எந்த அரசும் இயற்கையோ அல்லது இயற்கைக்கு மாறானதோ கிடையாது. ஒரு அரசு இருக்கும் வரை அது இயற்கையானது தான். அதை கவிழ்க்க சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவை பயன்படுத்தப்படுகிறது. சட்டவிரோதமாக கட்டிடம் கட்டியவர்கள், தற்கொலைக்கு தூண்டியவர்கள் எல்லாம் பாதுகாக்கப்படுகிறார்கள்.

    இதுபோன்ற அரசியல் அழுத்தங்கள் கொடுக்கும் யுக்தி எல்லாம் இயற்கை என்றால், உத்தவ் தாக்கரே அரசும் இயற்கையானது தான். இந்த அரசாங்கம் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து உள்ளது. வெள்ளம், புயல், கொரோனா பிரச்சினை ஏற்படாமல் இருந்திருந்தால் கடந்த ஒரு ஆண்டில் மராட்டியத்தின் நிலை வேறுமாதிரி இருந்திருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல அந்த கட்டுரையில் மகாவிகாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோது, சட்டசபை சபாநாயகர் பதவியை பகிர்ந்து கொள்வதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதலையும் சஞ்சய் ராவத் நினைவு கூர்ந்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், “நேரு சென்டரில் சபாநாயகர் பதவி தொடர்பாக காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபாநாயகர் பதவி தேசியவாத காங்கிரசுக்கு போய்விட கூடாது என்பதில் கார்கே, மற்றவர்கள் உறுதியாக இருந்தனர். சரத்பவார் அதுபோல கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவர் தனது கோப்புகளை வாங்கிக்கொண்டு கோபமாக அறையில் இருந்து வெளியேறினார். நானும், பிரபுல் பட்டேலும் அவரை பின்தொடர்ந்து சென்றோம்.

    கூட்டம் தொடங்கிய போதே உத்தவ் தாக்கரே தான் முதல்-மந்திரி என சரத்பவார் கூறிவிட்டார். ஆனால் கார்கேவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு நிலைமை மாறியது. அஜித்பவார் நீண்ட நேரமாக அறையில் செல்போனில் சாட் செய்து கொண்டு இருந்தார். அதன்பிறகு அவர் சென்றுவிட்டார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இந்தநிலையில் மறுநாள் அவர் ராஜ்பவனில் பதவி ஏற்றார். எனினும் அந்த அரசு 80 மணி நேரத்தில் கவிழ்ந்தது” என கூறியுள்ளார். தற்போது மராட்டிய சட்டசபை சபாநாயகராக காங்கிரசை சேர்ந்த நானா பட்டோலே இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×