search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி பரிசோதனை
    X
    கொரோனா தடுப்பூசி பரிசோதனை

    கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்றவருக்கு பாதிப்பா?- தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் விசாரணை

    சென்னையில் கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்றவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பற்றி டெல்லியில் உள்ள தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் விசாரணை நடத்துகிறார்.
    புதுடெல்லி:

    இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து, அதன் 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துகிறது.

    அந்த வகையில் சென்னையில் 40 வயதான வர்த்தக ஆலோசகர் ஒருவர் தானாக முன்வந்து தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கடந்த மாதம் 1-ந் தேதி இந்த தடுப்பூசி சோதனையில் பங்கேற்றார். ஆனால் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு கடுமையான நரம்பு மற்றும் உளவியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையொட்டி அவரது சார்பில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கும், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் தலைமை செயல் அதிகாரிக்கும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கும் இன்னும் தொடர்புடைய சிலருக்கும் சட்ட நிறுவனம் ஒன்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதில் அவர் தனக்கு ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும், இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை, தயாரிப்பு, வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரி உள்ளார்.

    இது தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரும், மருத்துவ பரிசோதனை தளத்தில் உள்ள நிறுவன நெறிமுறைக்குழுவினரும் விசாரிக்கின்றனர். இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அங்கமான தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்கள் பிரிவின் தலைவரான டாக்டர் சமிரான் பாந்தா கூறுகையில்,

    “எந்தவொரு அவசர விசாரணையும் அல்லது அனுமானமும் தவறாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரும், மருத்துவ பரிசோதனை தளத்தில் உள்ள நிறுவன நெறிமுறைக்குழுவினரும் சம்மந்தப்பட்ட நபரின் பாதிப்புக்கும், தடுப்பூசிக்கும் தொடர்பு ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர்” என குறிப்பிட்டார்.



    Next Story
    ×