search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு
    X
    ஊரடங்கு

    கொரோனா பரவல் எதிரொலி - ராஜஸ்தானில் இரவு 8 முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு

    அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், ராஜஸ்தானில் 13 மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 2,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,65,386 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 2,292 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ராஜஸ்தானில் 13 மாவட்டங்களில் இரவு 8 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    இதன்படி கோட்டா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானீர், உதய்பூர், அஜ்மீர், ஆல்வார், பில்வாரா, நாகூர், பாலி, டோங்க், சிகார் மற்றும் கங்காநகர் ஆகிய நகரங்களின் நகர்ப்புற எல்லைக்குள் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

    மேலும், இந்த 13 மாவட்டங்களின் நகர்ப்புறத்தில் உள்ள சந்தைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் ஆகியவை இரவு 7 மணிக்குள் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

    ஊரடங்கு உத்தரவின்போது திருமண விழாவுக்குச் செல்வோர், அத்தியாவசிய சேவைகள் தொடர்பான நபர்கள் மற்றும் பேருந்துகள், ரெயில்கள் மற்றும் விமானங்களில் பயணிப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். 2020 டிசம்பர் 31ம் தேதி வரை கட்டுப்பாட்டு மண்டலங்களில் இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.

    அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே கட்டுப்பாட்டு மண்டலங்களில் அனுமதிக்கப்படும். இந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுக்களால் வீடு வீடாக கண்காணிப்பு இருக்கும். பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை டிசம்பர் 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×