search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    விவசாயிகள் போராட்டம்: உள்துறை, பாதுகாப்புத்துறை, வேளாண்துறை மந்திரிகள் அவசர ஆலோசனை

    டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் உள்துறை, பாதுகாப்புத்துறை, வேளாண்துறை மந்திரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவும் பங்கேற்றுள்ளார்.
    டெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 4 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

    டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

    தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    இதற்கிடையில், டிசம்பர் 3-ம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அதற்கு முன்னதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றால் விவசாயிகள் புராரி மைதானத்திற்கு சென்று அங்கு தங்கள் போராட்டத்தை தொடரலாம் என உள்துறை மந்திரி அமித்ஷா நிபந்தனை விதித்தார். 

    ஆனால், அமித்ஷாவின் நிபந்தனையை நிராகரித்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி 4 மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்களுடன் தான் வந்துள்ளோம் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால், விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

    இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகிய மந்திரிகள் டெல்லியில் தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

    பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வீட்டில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜேபி நட்டாவும் பங்கேற்றுள்ளார்.

    இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.   
    Next Story
    ×