search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய சங்க தலைவர்
    X
    விவசாய சங்க தலைவர்

    எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரையும் மேடையில் பேச அனுமதிக்கமாட்டோம் - விவசாய சங்க தலைவர் பேட்டி

    4 மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்களை கொண்டு வந்துள்ளோம்... கவலைப்பட தேவையில்லை என்று டெல்லி எல்லையில் போராடிவரும் விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
    டெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 4 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

    டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    இதற்கிடையில், டிசம்பர் 3-ம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அதற்கு முன்னதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றால் விவசாயிகள் புராரி மைதானத்திற்கு சென்று அங்கு தங்கள் போராட்டத்தை தொடரலாம் என உள்துறை மந்திரி அமித்ஷா நிபந்தனை விதித்தார். 

    ஆனால், அமித்ஷாவின் நிபந்தனையை நிராகரித்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், விவசாயிகள் சங்க தலைவர் பி.கே.யு. கிரந்திகாரி இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
      
    சில விவசாயிகள் ஊடகவியலாளர்களிடம் தெரியாமல் தவறுதலாக நடந்துகொண்டதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற நிகழ்வுகள் இனி ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு கூட்டத்தின்போதும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக இனி அறிக்கையாக ஊடகவியலாளர்களுக்கு அளிக்கிறோம்.

    எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களையும் மேடையில் பேச அனுமதிக்கமாட்டோம் என முடிவெடுத்துள்ளோம். அது காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி அல்லது எந்த கட்சியானாலும் சரி.

    எங்களை ஆதரிக்கும் மற்ற அமைப்பினர் எங்களை விதிகளை கடைபிடித்தால் அவர்களை மட்டும் பேச கமிட்டி அனுமதிக்கும்.

    திறந்தவெளி சிறையான புராரிக்கு செல்வதற்கு பதில் டெல்லி செல்ல பயன்படும் 5 நுழைவு பகுதிகளான இங்கு இருந்தே எங்கள் போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம். நாங்கள் 4 மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்களை வைத்துள்ளோம். ஆகையால் கவலைப்பட தேவையில்லை. எங்கள் ஆபரேஷன் கமிட்டி அனைத்தையும் முடிவு செய்யும்

    என்றார். 

    Next Story
    ×