search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்
    X
    விவசாயிகள் போராட்டம்

    கண்டிஷன் போடக்கூடாது... அமித் ஷாவின் அழைப்பை நிராகரித்த விவசாயிகள்

    பேச்சுவார்த்தை தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷாவின் நிபந்தனையுடன் கூடிய அழைப்பை நிராகரிப்பதாக 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 4 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு டெல்லி புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதனை ஏற்று குறிப்பட்ட விவசாயிகள் அங்கு புறப்பட்டுச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதேசமயம், ஜந்தர் மந்தர் பகுதியை தங்கள் போராட்டத்துக்கு ஒதுக்காமல், புராரி மைதானத்தை ஒதுக்கியதால் எல்லையிலேயே பெரும்பாலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா விவசாயிகளிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதில், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து டிசம்பர் 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால், அனைத்து விவசாயிகளும் போராட்டம் நடத்துவதற்காக அரசால் ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

    மேலும், பனிக்காலத்தில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால் அவர்களுக்குத் தேவையான வசதிகள் புராரி மைதானத்தில் செய்யப்பட்டுள்ளதால், அனைவரும் அங்கே செல்ல வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

    ஆனால், அமித் ஷாவின் இந்த நிபந்தனையை விவசாய சங்கங்கள் ஏற்கவில்லை. அமித் ஷாவின் அழைப்பை நிராகரிப்பதாக 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. 

    இந்த விவகாரத்தை அரசாங்கம் திறந்த மனதுடன் அணுகியிருக்க வேண்டும், முன் நிபந்தனைகளை வைக்கக்கூடாது என்று விவசாயிகள் கூறி உள்ளனர். 

    பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது, வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய உரிமைகளையும் வாய்ப்புகளையும் வழங்கியிருப்பதாக கூறியிருந்த நிலையில், விவசாயிகள் இந்த முடிவை அறிவித்துள்ளனர். 

    விவசாய சங்க நிர்வாகிகள் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். இதில் போராட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×