search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடல்சார் பாதுகாப்பு கூட்டம்
    X
    கடல்சார் பாதுகாப்பு கூட்டம்

    கடல்சார் பாதுகாப்பு கூட்டம் - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார்

    இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய 3 நாடுகள் கடல்சார் பாதுகாப்பு கூட்டம் கொழும்பு நகரில் நடந்தது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார்.
    கொழும்பு:

    இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய 3 நாடுகளின் கடல்சார் பாதுகாப்பு கூட்டம், 2014-ம் ஆண்டு டெல்லியில் நடந்தது. 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர், நவம்பர் 27, 28-ந் தேதிகளில் 4-வது முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு கூட்டத்துக்கு கொழும்பு நகரில் இலங்கை அரசு ஏற்பாடு செய்தது.

    இந்த கூட்டத்தில் இந்தியா கலந்து கொள்ளுமாறு இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கமல் குணரத்னே அழைப்பு விடுத்தார்.

    இந்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொள்வார் என்று இந்திய அரசு அறிவித்தது.

    அதன்படி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அஜித் தோவல், நேற்று முன்தினம் இலங்கை தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் மாலத்தீவு பாதுகாப்பு மந்திரி மரிய தீதியை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

    அதைத் தொடர்ந்து, இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கமல் குணரத்னேயையும் சந்தித்து பேசினார்.

    இதுபற்றி கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் கூறுகையில், “தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கமல் குணரத்னேயை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வருகிற ராணுவம் மற்றும் பாதுகாப்பு கூட்டு தொடர்பான விஷயங்கள் குறித்து விவா தித்தார்” என குறிப்பிட்டது.

    நேற்று நடந்த முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு கூட்டத்தில் அஜித் தோவல் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் இலங்கை வெளியுறவு மந்திரி தினேஷ் குணவர்த்தனே தலைமை விருந்தினராக பங்கேற்று பேசினார். அந்த நாட்டின் வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜூம் கலந்து கொண்டார்.

    வளம் நிறைந்த இந்தோ பசிபிக் பிராந்தியத்திலும், இந்திய பெருங்கடலிலும் தன் ஆதிக்கத்தை அதிகரிக்க சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த கூட்டம் நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

    இந்த கூட்டம், கடல்சார் விழிப்புணர்வு, சட்ட ஆட்சிகள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், கடல் மாசு குறைப்பு, தகவல் பகிர்வு, திருட்டுகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இடையேயான கடல்சார் பாதுகாப்பு குறித்த கூட்டு நடவடிக்கையை தொடங்க வடிவமைக்கப்பட்டது. எனவே அவை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்புக்கு இந்த கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    கூட்டத்தில் நடந்த முக்கிய விவாதங்கள், அஜித் தோவல், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கமல் குணரத்னே, மாலத்தீவு பாதுகாப்பு மந்திரி மரிய தீதி ஆகியோர் கையெழுத்து போட்டதின்மூலம் முறைப்படுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
    Next Story
    ×