search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்
    X
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

    வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் - டெல்லி எல்லையில் பரபரப்பு

    தலைநகர் டெல்லியின் எல்லையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாக சென்றுள்ளனர். இந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யக்கோரியும் லாரிகள், டிராக்டர்கள் போன்ற ஏராளமான வாகனங்களில் அவர்கள் டெல்லிக்கு புறப்பட்டனர்.

    டெல்லி நோக்கி அலையலையாக திரண்டு வந்த விவசாயிகளை அரியானா அரசு தனது மாநில எல்லையில் தடுத்து நிறுத்தியது. ஆனால் போலீசாரின் தடையையும் மீறி அரியானாவில் நுழைந்த பஞ்சாப் விவசாயிகள், பின்னர் அங்கிருந்து டெல்லி நோக்கி தங்கள் பேரணியை தொடர்ந்தனர்.

    பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக டெல்லிக்குள்ளே நுழைய முயன்ற விவசாயிகளை டெல்லி போலீசாரும் அனைத்து எல்லைகளிலும் தடுத்து நிறுத்தினர். சாலைகளில் முள்வேலி, தடுப்புகள் என பல அடுக்கு தடையை ஏற்படுத்தி பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இதனால் டெல்லி எல்லைகளில் போலீசாருக்கும், பஞ்சாப் விவசாயிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக திக்ரி, சிங்கு எல்லை பகுதிகளில் நடந்த கைகலப்பால் போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு, தண்ணீர் பீய்ச்சியடிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    ஆனால் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதில் உறுதியாக இருந்ததால், போலீசார் பின்னர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் இறங்கினர். இதில் அமைதியான போராட்டத்துக்காக விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தை விவசாயிகளுக்கு போராட்டத்துக்காக போலீசார் ஒதுக்கினர். அதன்படி விவசாயிகள் தங்கள் வாகனங்களில் நிரங்காரி மைதானத்துக்கு சென்றனர். அங்கு விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    பஞ்சாப்பை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.

    பச்சை, சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்களில் கொடிகளை ஏந்தியுள்ள விவசாயிகள், 3 சட்டங்களையும் திரும்பப்பெறுமாறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அத்துடன் பாட்டு, நடனம், இசைக்கருவிகளை மீட்டியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த விவசாயிகளுக்கு டெல்லியில் உள்ள குருத்வாரா மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போல டெல்லி ஆம் ஆத்மி அரசும் உணவு வழங்கி வருகிறது.

    மேலும் கூட்டத்தினரிடையே கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ரிக்‌ஷா ஒன்றில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. அது போராட்டக்காரர்களிடையே சுற்றி சுற்றி வந்து செல்கிறது.

    இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்டோரும் பங்கேற்று உள்ளனர். விவசாயிகளின் வரலாறு காணாத இந்த ஒற்றுமை, சட்டங்களை திரும்பப்பெற அரசுக்கு அழுத்தத்தை அதிகரிக்கும் என மேதா பட்கர் தெரிவித்தார்.

    நிரங்காரி மைதானத்தில் நேற்று மாலை வரை சுமார் 700 விவசாயிகள் குழுமியிருக்கும் நிலையில், ஏராளமானோர் தொடர்ந்து வந்தவாறே உள்ளனர். குறிப்பாக, உத்தர பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியின் எல்லை பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். நிரங்காரி மைதானத்துக்கு செல்ல மறுத்து வரும் அவர்கள், எல்லை பகுதியில் நெடுஞ்சாலையில் இருந்துகொண்டே தங்கள் போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.

    குறிப்பாக சிங்கு, திக்ரி எல்லை பகுதியில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் வந்த விவசாயிகள் குவிந்துள்ளனர். ஜந்தர் மந்தர் பகுதியை தங்கள் போராட்டத்துக்கு ஒதுக்காமல், நிரங்காரி மைதானத்தை ஒதுக்கியதால் எல்லையிலேயே போராடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த சட்டங்களை திரும்பப்பெறாமல் வீடு திரும்பமாட்டோம் என கூறியுள்ள அவர்கள், பல நாட்கள் டெல்லியில் தங்குவதற்காக அத்தியாவசிய பொருட்கள் போன்ற சகல ஏற்பாடுகளுடன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
    அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் பகுதிகளில் விவசாயிகள் குவிந்திருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதுடன், எல்லை நெடுகிலும் பரபரப்பும் நிலவி வருகிறது.

    Next Story
    ×