search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி எல்லையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X
    டெல்லி எல்லையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய ஒரு வழியாக அனுமதி அளித்தது போலீஸ்

    டெல்லி புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி நோக்கி 2 நாட்கள் மிகப்பெரிய பேரணி நடத்தி, டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்தன. அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று முதல் டெல்லி நோக்கி நோக்கி பேரணியாக சென்றவண்ணம் உள்ளனர். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களிலும், நடந்தும் டெல்லியை நோக்கி சென்றனர். 

    ஆனால் இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எல்லைகளில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டெல்லி நோக்கிச் செல்லும் அனைத்து பாதைகளையும், பஞ்சாபில் இருந்து அரியானா மாநிலத்திற்குள் நுழையும் அனைத்துப் பாதைகளையும் போலீசார் அடைத்தனர். குறிப்பாக அரியானா-டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

    தடையை மீறி டெல்லியை நோக்கி புறப்பட்ட விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விரட்டியடித்தனர். இன்று நிலைமை மேலும்  தீவிரமடைந்தது. டெல்லி-அரியானா எல்லையில் (சிங்கு எல்லை) போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதனால் பதற்றம் உருவானது. எனினும், விவசாயிகள் பின்வாங்காமல் எல்லையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். 

    எத்தனை நாட்கள் ஆனாலும் டெல்லிக்கு செல்வதில் உறுதியாக உள்ளனர். பல நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்களை டிராக்டர்களில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர். சாலையோரம் சமையல் செய்து சாப்பிடுகின்றனர்.

    டெல்லி எல்லைகளில் நிலவும் பதற்றத்தை தணிக்க விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தினார். 

    இந்நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என டெல்லி கமிஷனர் தெரிவித்தார். விவசாயிகள் சட்டம் ஒழுங்கை பராமரித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் கமிஷனர் அறிவுறுத்தினார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் புறப்படுகின்றனர்.

    இதற்கிடையே டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளை கைது செய்து சிறைவைப்பதற்காக, 9 மைதானங்களை தற்காலிக சிறைகளாக மாற்றுவதற்கு காவல்துறை அனுமதி கேட்டது. இதனை அரசு நிராகரித்தது.
    Next Story
    ×