search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா, சீனா
    X
    இந்தியா, சீனா

    இந்தியாவும், சீனாவும் நேர்மையுடன் செயல்படுகின்றன: சீனா

    கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக்கொள்ள இந்தியாவும், சீனாவும் நேர்மையுடன் செயல்படுகின்றன என்று சீனா கூறி உள்ளது.
    பீஜிங் :

    இந்தியா, சீனா இடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த மே மாதம் தொடங்கி கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் தொடர் அத்துமீறல்களுக்கு இந்தியா தக்க பதிலடி தந்தது.

    அதைத் தொடர்ந்து இரு தரப்பும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினரை குவித்து, அங்கு தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.

    இதற்கு மத்தியில் அந்த பகுதியில் அமைதியையும், சமாதானத்தையும் மீட்டெடுப்பதற்காக இரு தரப்பு ராணுவமும் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த 6-ந் தேதி, இரு தரப்பினரிடையே 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த நிலையில் பீஜிங்கில் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் நேற்று காணொலி காட்சி வழியாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கிழக்கு லடாக்கில் இந்திய, சீன எல்லையின் தற்போதைய நிலவரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    சீன, இந்திய படைகளின் தளபதி மட்டத்திலான 8-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னர் எல்லை பகுதிகளின் நிலைமை ஒட்டுமொத்தமாக நிலையாக உள்ளது.

    இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சீனாவும், இந்தியாவும் எல்லையின் மேற்கு செக்டாரில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் படைகளை விலக்கிக்கொள்வதை ஊக்குவிப்பதற்கு இரு நாடுகளும் நேர்மையான, ஆழமான தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை பேணி வருகின்றன.

    இரு நாடுகளின் தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை ஆர்வமுடன் செயல்படுத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இரு தரப்பு படைகளும் எல்லையில் கட்டுப்பாட்டை உறுதி செய்து வருகின்றன. தவறான புரிந்து கொள்ளுதலும், தவறான கணக்கீடும் தவிர்க்கப்படுகிறது.

    ராணுவம் மற்றும் ராஜதந்திர வழிகளில் இந்திய தரப்புடன் தொடர்புகளை பேணுவதற்கு சீனா தயாராக உள்ளது. சமாதானத்தை பாதுகாப்பதற்காக சீனாவுடன் இந்திய தரப்பு ஒருமித்த கருத்தை, ஒரு நேர்மையான அணுகுமுறையை, நேர்மறையான நடவடிக்கைகளுடன் செயல்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்
    Next Story
    ×