search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கர்நாடக மந்திரிசபை நாளை விரிவாக்கம்: புதியவர்களுக்கு வாய்ப்பு

    கர்நாடக மந்திரிசபை நாளை (சனிக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்போது எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், சி.பி.யோகேஷ்வர் ஆகியோருக்கு மந்திரி பதவி வழங்கப்பட உள்ளது. அதுபோல் சில மந்திரிகளின் பதவிகள் பறிக்கப்பட இருக்கிறது.
    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் பதவி ஏற்றார்.

    எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 16 மாதங்கள் ஆகிறது. ஆட்சி அமைந்தபோது எடியூரப்பா மட்டும் பதவி ஏற்றார். அதன் பிறகு முதல் முறையாக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 16 மந்திரிகள் பதவி ஏற்றனர். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கு பிறகு 2-வது முறையாக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது.

    அப்போது காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து வந்த சுதாகர், பைரதி பசவராஜ் உள்பட 11 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் மந்திரிசபையின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது. அதில் 6 இடங்கள் காலியாக இருந்தன. சமீபத்தில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து மந்திரி சி.டி.ரவி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மந்திரிசபையில் காலியிடங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. மந்திரிசபையில் தற்போது 7 இடங்கள் காலியாக உள்ளன.

    இந்த நிலையில் 3-வது முறையாக மந்திரிசபை விரிவாக்கம் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் எம்.எல்.சி.க்கள் எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், சி.பி.யோகேஷ்வர், எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி, முருகேஷ் நிரானி உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து வந்து இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த எச்.விஸ்வநாத்திற்கு (தற்போது எம்.எல்.சி.யாக உள்ளார்) மந்திரி பதவி கிடைக்காது என்றே சொல்லப்படுகிறது. ஆயினும் அவரும் மந்திரி பதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

    மந்திரிசபையில் இருந்து சரியாக செயல்படாத சிலரை நீக்கவும் எடியூரப்பா முடிவு செய்துள்ளார். அவர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கும் பொருட்டு எடியூரப்பா தலைமையில் மந்திரிசபை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் நடக்கிறது. வழக்கமான மந்திரிசபை கூட்டம் புதன்கிழமைகளில் நடைபெறும். ஆனால் நாளை மந்திரிசபை விரிவாக்கம் உள்ளதால், இந்த மந்திரிசபை கூட்டம் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மந்திரிசபை விரிவாக்கத்திற்கு, பதவி கிடைக்காதவர்கள் போர்க்கொடி தூக்குவார்கள் என்று கூறப்படுகிறது. சலசலப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே வாரிய தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சில எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு ஆளும் பா.ஜனதாவில் அதிருப்தி வெடிக்கும் என்று கூறப்படுகிறது. இதை சமாளிக்க தேவையான முன்னேற்பாடுகளை முதல்-மந்திரி எடியூரப்பா செய்து கொண்டுள்ளார்.

    இதற்கிடையே துணை முதல்-மந்திரி லட்சமண் சவதி, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்கள் பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. இதை மறுத்துள்ள அவர்கள், பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.டி.ரவியின் அலுவலகத்தில் நாளை (அதாவது இன்று) பூஜை நடைபெற உள்ளதாகவும், அதில் பங்கேற்பதற்காகவே தாங்கள் டெல்லி செல்வதாகவும் கூறினர். நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஏற்கனவே டெல்லியில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×