search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தடுப்பூசி வினியோக பணியில் மத தலைவர்களின் உதவியை நாடும் மத்திய அரசு

    கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வினியோக பணிகளில் மத தலைவர்களின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
    புதுடெல்லி:

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் உலகின் பல்வேறு நாடுகளில் தயாராகி வருகின்றன. இந்தியாவிலும் பல தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனைகளில் உள்ளன.

    எனவே தடுப்பூசிகளை வினியோகிக்கும் செயல் திட்டங்களை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. தடுப்பூசி போடுவதில் சுகாதார பணியாளர்கள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக மாநில, மாவட்ட அளவில் சிறப்பு குழுக்களை உருவாக்க அறிவுறுத்தி இருந்தது.

    இந்த நிலையில் தடுப்பூசிகளை சுமுகமாக வினியோகிப்பதற்கு ஒன்றிய அளவில் சிறப்பு குழுக்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கொரோனா தடுப்பூசி வினியோகத்துக்கான திட்டமிடல் மற்றும் ஆயத்தப்பணிகளை மேலும் பரவலாக்கும் நோக்கத்துடன் கொரோனா தடுப்பூசி அறிமுகத்துக்கான ஒன்றிய சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும். இந்த குழுக்கள் துணை மண்டல கலெக்டர் அல்லது தாசில்தார் தலைமையில் இயங்க வேண்டும்.

    இந்த குழுக்களில் அரசு துறைகளின் பிரதிநிதிகள், வளர்ச்சி பங்காளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், உள்ளூர்செல்வாக்கு பெற்ற மனிதர்கள் மற்றும் மத தலைவர்கள் இடம்பெற வேண்டும்.

    தடுப்பூசிக்கான பயனாளர்களின் தரவுகளை நிர்வகித்து மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்குதல், திட்டமிடல், தடுப்பூசி சேமித்தலுக்கான திட்டமிடல், ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பு ஏற்றல் போன்ற பணிகளை இந்த குழுவினர் மேற்கொள்வார்கள்.

    குறிப்பாக தடுப்பூசி வினியோகத்தின் மேற்பார்வை, உள்ளூர் சூழலை அடிப்படையாக கொண்டு தகவல் தொடர்பு அமைத்தல் போன்றவற்றை இந்த குழு உறுதி செய்வதுடன், தடுப்பூசி தொடர்பான வதந்திகள் பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.

    இந்த விவகாரத்தில் மத தலைவர்கள் உள்ளிட்ட உள்ளூர் செல்வாக்குள்ள நபர்களின் பங்களிப்பை அதிகரித்து தடுப்பூசி குறித்த தவறான தகவல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தேவையான இடங்களுக்கு தடுப்பூசி போதுமான அளவு வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×