search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறைந்த நடிகர் அம்பரீசின் நினைவு மண்டபம்
    X
    மறைந்த நடிகர் அம்பரீசின் நினைவு மண்டபம்

    மறைந்த நடிகர் அம்பரீசின் நினைவு மண்டபம்- வெண்கல சிலை திறப்பு

    மறைந்த நடிகர் அம்பரீசின் 2-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி கொட்டகவுடன தொட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அவரது நினைவு மண்டபம் மற்றும் வெண்கல சிலையை அவருடைய மனைவியும், எம்.பி.யுமான சுமலதா திறந்துவைத்து உருக்கமாக பேசினார்.
    மண்டியா :

    கன்னட பிரபல நடிகராக இருந்தவர் அம்பரீஷ். காங்கிரசை சேர்ந்த இவர் முன்னாள் மந்திரி ஆவார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் அவரது சொந்த ஊரான மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கொட்டகவுடனதொட்டி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள் நினைவு மண்டபம் கட்டியுள்ளனர். இந்த நினைவு மண்டபத்தில் மறைந்த நடிகர் அம்பரீசின் வெண்கல உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நடிகர் அம்பரீஷ் மறைந்து 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கொட்டகவுடனதொட்டியில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபம் மற்றும் அவரது வெண்கல உருவ சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் அவரது மனைவியும், நடிகையும், மண்டியா தொகுதி எம்.பி.யுமான சுமலதா அம்பரீஷ், இவரது மகன் அபிஷேக் அம்பரீஷ், நடிகர் தர்ஷன் ஆகியோர் கலந்துகொள்ள நேற்று காலை திறந்த ஜீப்பில் வந்தனர். அப்போது நடிகர் அம்பரீசின் ஆதரவாளர்களும், ரசிகர்களும் வழிநெடுகிலும் திரண்டு வந்து மேளதாளம் முழங்கவும், மலர்கள் தூவியும் அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

    பின்னர் நினைவு மண்டபம், வெண்கல உருவ சிலையை நடிகை சுமலதா அம்பரீஷ், நடிகர் தர்ஷன் ஆகியோர் திறந்துவைத்தனர். விழாவில் நடிகை சுமலதா பேசியதாவது:-

    மறைந்த நடிகரும், எனது கணவருமான அம்பரீசின் நினைவு மண்டபம் மற்றும் அவரது உருவச் சிலை திறந்துவைத்துள்ளேன். இது நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் தான் காரணம். அம்பரீஷ் மீது காட்டிய அன்பை என் மீதும் நீங்கள் காட்டியுள்ளீர்கள். அதனால் தான் பல சவால்களை எதிர்கொண்டு மண்டியா தொகுதி எம்.பி.யாக வெற்றி பெற்றேன். இதற்கு உங்கள் அன்பு தான் காரணம். இதனால் என்னை நான் மண்டியா எம்.பி. என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

    அம்பரீசுக்கு நினைவு மண்டபம் கட்ட யாரிடமும் பணம் கேட்கவில்லை. நீங்களே நினைவு மண்டபத்தை கட்டி முடித்து, என்னை திறந்துவைக்க அழைத்தீர்கள். நீங்கள் எங்கள் மீது அன்பு, பாசம், நம்பிக்கை வைத்துள்ளீர்கள். இந்த நம்பிக்கையை நான் ஒரு போதும் வீணடிக்கமாட்டேன். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை உங்களை மறக்க மாட்டேன்.

    சிலர் நமக்கு எதிராக கெட்ட செயல்களை செய்து வருகிறார்கள். அது அவர்களின் கடமை. ஆனால் நாங்கள் எப்போதும் அனைவருக்கும் நல்லதையே செய்து வருகிறோம். இதை எனக்கு அம்பரீஷ் கற்றுக்கொடுத்துள்ளார். என்னை பற்றி அவதூறு பேசுபவர்கள் பேசட்டும். அதை பற்றி கவலைப்படாமல் நான் எனது வேலையை செய்வேன்.

    நான் எம்.பி.யாக ஆன பிறகு அம்பரீஷ் பெயரை குறிப்பிடாமல் இருப்பதாக கூறுகிறார். எனது பெயரே சுமலதா அம்பரீஷ் தான். அம்பரீஷ் என்ற பெயர் தான் எனக்கு உத்வேகம் கொடுக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×