search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்கனா ரணாவத்
    X
    கங்கனா ரணாவத்

    நடிகை கங்கனா ரணாவத்தை கைது செய்ய போலீசாருக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு

    பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது ஏன்? என மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
    மும்பை:

    பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து கூறியதாக மும்பை பாந்திரா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

    இதை விசாாித்த பாந்திரா கோா்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில், மும்பை போலீசார் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசுதல், குறிப்பிட்ட மத உணர்வுகளைப் புண்படுத்துதல், தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    மேலும் இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர்களுக்கு 3 முறை நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

    இந்நிலையில் தங்களுக்கு எதிராக போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, எம்.எஸ். கார்னிக், போலீசார் 3 சம்மன்களை அனுப்பி உள்ளனர். எனவே அதற்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என கூறினர்.

    இதற்கு பதில் அளித்த நடிகை கங்கனா ரணாவத்தின் வக்கீல், நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ஆகிய இருவரும் தற்போது சொந்த ஊரில் இருப்பதால் வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை பாந்திரா போலீஸ் நிலையத்தில் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தைப் பதிவு செய்வார்கள் என்றார். இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

    மேலும் ஐகோர்ட்டு நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலியை கைது செய்ய இடைக்கால தடைவிதித்தது.

    மேலும் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ததற்கு நீதிபதிகள் ஆட்சேபணை தெரிவித்து கூறியதாவது:

    இந்த வழக்கை பார்க்கும்போது தேசத்துரோக பிரிவை பதிவு செய்வதற்கான முகாந்திரம் இல்லை. அது தவறானது என்பது எங்களது கருத்து. இதுபோன்ற பல்வேறு வழக்குகளில் தற்போது தேசத்துரோக வழக்கை போலீசார் பதிவு செய்வது ஏன்? என்று புரியவில்லை. அரசுக்கு அடிபணியாவிட்டால் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டுமா?. நமது நாட்டு குடிமக்கள் மீது இப்படி தான் நடந்து கொள்ள வேண்டுமா?. இதுபோன்ற வழக்குகளில் போலீசார் கண்ணியம் மற்றும் உணர்திறனுடன் நடந்து கொள்ள வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

    இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 11-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×