search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பயங்கரவாதிகள் தாக்குதல் சதி : பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் இந்தியா கண்டிப்பு

    பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டது. இதையொட்டி, பாகிஸ்தான் தூதரக அதிகாரியை இந்தியா நேரில் அழைத்து கண்டித்ததுடன் தனது எதிர்ப்பை பதிவும் செய்தது.
    புதுடெல்லி:

    ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நக்ரோட்டா சுங்கசாவடி அருகே பாதுகாப்பு படையினர் கடந்த 19-ந் தேதி தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதித்தனர். அதில் இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது கையெறிகுண்டுளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

    கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 4 பேரும், பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு செயல்படுகிற ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் இந்தியாவில் மும்பை தாக்குதல் நாளில் (வரும் 26-ந்தேதி) அதிபயங்கர தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன்தான் இங்கு வந்துள்ளனர். ஆனால் நமது பாதுகாப்பு படையினர் உஷாராக இருந்ததால் இந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் டெல்லியில் அவசர கூட்டம் ஒன்றை நடத்தினார். உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்று அவர்களது தாக்குதல் முயற்சியை முறியடித்ததற்காக பாதுகாப்பு படையினரை அவர் பாராட்டினார்.

    பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த செய்த சதி தொடர்பாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரியை வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் அழைத்து கண்டித்தது. தனது எதிர்ப்பையும் முறைப்படி பதிவு செய்தது.

    இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாகிஸ்தான் தனது மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் கொள்கையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், பிற நாடுகளில் தாக்குதல்கள் நடத்துவதற்காக அங்கு இயங்கி வருகிற பயங்கரவாத கட்டமைப்புகளை அகற்ற வேண்டும் என்றும் இந்தியா கூறியது.

    பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு பகுதியையும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்பதில் சர்வதேச கடமைகளையும், இரு தரப்பு கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும். இந்தியாவின் இந்த நீண்ட கால கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம்.

    பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் தனது தேசிய பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், எடுக்க இந்தியா உறுதியுடன் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×