search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசி பட்டீல்
    X
    பிசி பட்டீல்

    மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எடியூரப்பா முடிவு எடுப்பார்: மந்திரி பி.சி.பட்டீல்

    பா.ஜனதா மேலிடத்துடன் ஆலோசித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு எடுப்பார் என்று மந்திரி பி.சி.பட்டீல் தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக விவசாயத் துறை மந்திரி பி.சி.பட்டீல் கொப்பலில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

    எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவருக்கும் மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதில் தவறு எதுவும் இல்லை. கர்நாடக மந்திரிசபையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப முதல்-மந்திரி எடியூரப்பா நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுதொடர்பாக டெல்லியில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார். மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுமா? அல்லது மாற்றி அமைக்கப்படுமா? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை.

    மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தான் முடிவு எடுப்பார். இதற்காக பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து சரியான முடிவை அவர் எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கர்நாடக அரசு மராட்டிய மேம்பாட்டு கழகத்தை உருவாக்கி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் மராட்டிய சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். கர்நாடகத்தில் இருக்கும் மராட்டியர்களும் கன்னடர்கள் தான். அவர்களை மராட்டிய மாநிலத்திற்கு அனுப்பி வைக்க முடியாது.

    வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும் அரசு புதிய வாரியத்தை தொடங்கி உள்ளது. மாநிலத்தில் வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பெருமளவில் உள்ளனர். அந்த சமுதாயத்திலும் பின்தங்கிய மக்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்களின் வளர்ச்சிக்கு இந்த வாரியம் தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    தேர்தலில் தோல்வி அடையும் போதெல்லாம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பழி போடுவது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கையாகி விட்டது. அதன்படி தான் கர்நாடகத்தில் நடந்த 2 சட்டசபை தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×