search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகள் திறப்பு
    X
    பள்ளிகள் திறப்பு

    கொரோனா தொற்று அதிகரிப்பு - மும்பை, தானேயில் டிச. 31 வரை பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு

    கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மும்பை மற்றும் தானேயில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.

    இதனால் கடந்த கல்வி ஆண்டில்(2019-20) பரீட்சை எழுத முடியாத அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்தது.

    இதற்கிடையே, கொரோனா பரவல் புதிய உச்சத்தை எட்டியதால் 2020-21-ம் கல்வியாண்டில் பள்ளிக்கூடங்களை திறக்க முடியாததால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    சமீபநாட்களாக கொரோனா தாக்கம் தணிந்ததால், தீபாவளிக்கு பிறகு, அதாவது வரும் 23-ம் தேதியில் இருந்து 9, 10, 12 ஆகிய வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக பள்ளிகளும் தயார்படுத்தப்பட்டு வந்தன.

    இந்நிலையில், திடீர் முடிவாக மும்பையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்பட்டு உள்ளது. இதற்கான முடிவை மும்பை மாநகராட்சி எடுத்துள்ளது.

    இதுதொடர்பாக நேற்று மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மும்பையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு டிசம்பர் 31-ம் தேதி வரை தள்ளிப்போடப்படுகிறது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

    கடந்த 16-ந் தேதி மும்பையில் 409 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அடுத்தடுத்த நாட்களில் அது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி கடந்த 17-ந் தேதி 541 பேரும், 18-ந் தேதி 871 பேரும், 19-ந் தேதி 924 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். எனவே பள்ளிகளை திறக்க தற்போது உகந்த நேரம் அல்ல. மேலும் பல பள்ளிகள் கொரோனா சிகிச்சை மையங்களாகவும், தனிமை மையங்களாகவும், பரிசோதனை மையங்களாகவும் செயல்படுகின்றன. எனவே பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல், தானே மாவட்டத்திலும் டிசம்பர் 31 வரை பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது என மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நர்வேகர் தெரிவித்து உள்ளார். ஆனாலும், ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என கூறியுள்ளார். 
    Next Story
    ×