search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    அடுத்தது இப்போது... உலக நாடுகள் உற்றுநோக்கும் பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு இன்று துவக்கம்

    ‘அடுத்தது இப்போது’ என்ற கருப்பொருளில் 23-வது பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
    பெங்களூரு:

    பெங்களூருவில் இன்று முதல் 3 நாட்களுக்கு 23வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டை,  கர்நாடக புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு, தகவல் தொழில்நுட்பத்துக்கான கர்நாடக அரசின் தொலைநோக்கு குழு, உயிரி தொழில்நுட்பம்  மற்றும் தொடக்க நிறுவனங்கள், இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா, எம்எம்  அறிவியல் தொழில்நுட்ப தகவல் தொடர்பு நிறுவனம் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கர்நாடக அரசு  நடத்துகிறது. 

    இந்த மாநாட்டை இன்று காலை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். இதில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், சுவிட்சர்லாந்து துணை அதிபர் கய் பர்மலின் உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் முதல்-மந்திரி எடியூரப்பா, தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். இதற்கு முன்பு நடைபெற்ற 22 தொழில்நுட்ப மாநாடுகளில் அனைவரும் நேரில் கலந்து கொண்டனர். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக அனைத்தும் காணொலி காட்சி மூலம் நடக்கிறது. 25-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கண்காட்சியை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்குகின்றன.

    சிந்தனையாளர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வியாளர்கள் ஆகியோர் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

    100-க்கும் அதிகமான புதிய தொழில்கள், சுமார் 4,000 தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் 70-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடக்கின்றன. 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை இந்த கண்காட்சியில் அரங்குகளை அமைத்து வெளிப்படுத்துகின்றன. இந்த கண்காட்சியின்போது, பிற நாடுகளுடன் கர்நாடகம் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடிவு செய்துள்ளது.

    ‘அடுத்தது இப்போது’ என்ற கருப்பொருளில், இந்த ஆண்டின் உச்சி மாநாடு நடக்கிறது. கொரோனா தொற்றுக்கு பிந்தைய உலகின் முக்கிய சவால்கள், முக்கிய தொழில்நுட்பங்களின் தாக்கம் குறித்தும், தகவல் தொழில்நுட்ப துறையின் புதுமையான கண்டுபிடிப்புகள், உயிரி தொழில்நுட்பம் பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
    Next Story
    ×