search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    கர்நாடகத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டால் எடியூரப்பாவே பொறுப்பு: சித்தராமையா

    மராட்டிய சமூக மேம்பாட்டு கழகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டால் எடியூரப்பாவே பொறுப்பு என்று சித்தராமையா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வீரசைவ-லிங்காயத் சமூக மேம்பாட்டு வாரியம், மராட்டிய சமூக மேம்பாட்டு கழகம் அமைக்க முடிவு செய்துள்ளதாக எடியூரப்பா கூறியுள்ளார். எந்தவிதமான அறிவியல் பூர்வமான ஆய்வும் நடத்தாமல், சாதி அடிப்படையில் வாரியங்களை அமைப்பது, இந்த சமுதாயத்துக்கு எதிரானது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கு விரோதமானது. சாதனைகள் அடிப்படையில் தேர்தலை சந்திக்காமல், இத்தகைய மலிவான முறையில் சதி செய்து வெற்றி பெற பா.ஜனதா முயற்சி செய்கிறது. இதன் மூலம் சமூகங்களை இந்த அரசு உடைக்கிறது.

    திட்டங்களை அறிவியல் பூர்வமாக ஆலோசித்து செயல்படுத்த வேண்டும். வறுமையை ஒழிக்கும் எண்ணம் எடியூரப்பாவுக்கு இருந்தால் அரசிடம் உள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வீரசைவ-லிங்காயத் மேம்பாட்டு வாரியம் அமைக்கும் முடிவை நாங்கள் எதிர்க்கவில்லை. வறுமை என்பது சாதி-மதங்களை கடந்தது. அடிமட்ட சமூகங்களில் மட்டுமின்றி மேல் சமூகங்களிலும் ஏழைகள் உள்ளனர்

    அனைத்து ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு தீட்டும் திட்டங்களை நான் வரவேற்கிறேன். ஆனால் அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய முடிவுகளை நான் கண்டிக்கிறேன். கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடகத்தில் வாழும் கன்னடர்கள் மற்றும் மராட்டிய மக்கள் நல்லிணக்கத்துடன் இருக்கிறார்கள். ஆனால் இப்போது மராட்டிய சமூக மேம்பாட்டு வாரியத்தை இந்த அரசு அறிவித்து கன்னடர்களை தூண்டிவிட்டு முட்டாளாக்கியுள்ளது.

    இதனால் கர்நாடகத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டால் அதற்கு எடியூரப்பாவே பொறுப்பு. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, அன்ன பாக்யா, ஷீர பாக்யா, கிருஷி பாக்யா, இந்திரா உணவகம் உள்பட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினேன். இது எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் சேர்ந்தவை அல்ல. அரசியல் நோக்கத்தில் இந்த திட்டங்களை எடியூரப்பா அரசு புறக்கணித்து வருகிறது. இட ஒதுக்கீடு, சமூகநீதி குறித்து நாங்கள் பேசினால், அதை சாதியவாதிகள் என்று பா.ஜனதாவினர் குறை கூறுகிறார்கள். இப்போது பா.ஜனதா அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?.

    சாதிகள் மட்டுமின்றி மொழிகள் இடையே மோதலை உருவாக்கும் முயற்சியில் பா.ஜனதா அரசு இறங்கியுள்ளது. இத்தகைய துக்ளக் தர்பார் ஆட்சியால் கர்நாடகத்தில் அராஜகம் அதிகரித்துள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க இந்த அரசால் முடியவில்லை. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசிடம் பணம் இல்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசிடம் நிதி இல்லை. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மக்கள் செத்து மடிகிறார்கள். ஆனால் சாதி வாரியங்களுக்கு மட்டும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் எங்கிருந்து வருகிறது?.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×