search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா, அஜித் பவார்
    X
    எடியூரப்பா, அஜித் பவார்

    மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி அஜித் பவாருக்கு எடியூரப்பா கண்டனம்

    மகாராஷ்டிரா மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார், எல்லை பிரச்சினையில் தேவையற்ற கருத்துகளை கூறி தீமூட்டும் வேலையை செய்கிறார் என்று அஜித் பவாருக்கு எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் நினைவு தினத்தையொட்டி மகாராஷ்டிரா மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தற்போது கர்நாடகத்தில் உள்ள பெலகாவி, கார்வார், நிப்பானி ஆகிய பகுதிகளில் மராட்டிய மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். அதனால் அந்த பகுதிகள், மகாராஷ்டிராவிற்கு சொந்தமானது. இந்த பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைப்பது பால் தாக்கரேயின் கனவாக இருந்தது. அவரது இந்த கனவை நாம் நிறைவேற்றுவோம்“ என்றார்.

    அஜித் பவாரின் இந்த கருத்துக்கு கர்நாடக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கன்னட சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. முதல்-மந்திரி எடியூரப்பாவும் அஜித் பவாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பெலகாவி பிரச்சினையில் மகாஜன் அறிக்கையே இறுதியானது என்பது இந்த உலகத்திற்கு தெரியும். ஆனால் மகாராஷ்டிரா மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார், எல்லை பிரச்சினையில் தேவையற்ற கருத்துகளை கூறி தீமூட்டும் வேலையை செய்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கர்நாடகத்தில் வசிக்கும் மராட்டியர்களும் கன்னடர்களை போலவே வசிக்கிறார்கள்.

    கடந்த 2011-ம் ஆண்டு பெலகாவியில் நடைபெற்ற உலக கன்னட இலக்கிய மாநாட்டில் ஏராளமான மராட்டிய மக்கள் கலந்து கொண்டனர். இனி வரும் நாட்களில் இதுபோன்ற கருத்துகளை கூறுவதை அஜித் பவார் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
    Next Story
    ×