search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    விஜயநகரை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் விரைவில் உதயம்: கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்

    பல்லாரி மாவட்டத்தை 2 ஆக பிரித்து விஜயநகரை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் விரைவில் உருவாக்க கர்நாடக மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.

    இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல்லாரி மாவட்டத்தை 2 ஆக பிரித்து விஜயநகரை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த முறை நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான பணிகள், புதிய மாவட்டத்தில் எந்ததெந்த பகுதிகளை சேர்ப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் மாதம் 7-ந் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடர் அதே மாதம் 15-ந் தேதி வரை நடைபெறும்.

    மராட்டிய மேம்பாட்டு ஆணையம் அமைப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். அது தற்போது மராட்டிய சமூக மேம்பாட்டு கழகம் என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மராட்டிய சமூக மேம்பாட்டு கழகத்திற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆணையம் உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு சட்டம் இயற்ற வேண்டும். ஆனால் மேம்பாட்டு கழகம் அமைக்க அரசின் முடிவே போதுமானது. இந்த மேம்பாட்டு கழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்கு அமைக்கப்படும் கழகத்திற்கு சிலர் ஏன்? எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த சமூகத்தின் வளர்ச்சி நோக்கத்தில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

    கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் மத்திய அரசும் முதற்கட்டமாக ரூ.577 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நிவாரண பணிகளுக்கு அதையும் பயன்படுத்துவோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை எழுந்து வருகிறது. இதுகுறித்து ஆராய மந்திரிசபை துணை குழு அமைக்கப்படும். யார் தலைமையில் இந்த குழுவை அமைப்பது என்பதை முதல்-மந்திரி முடிவு செய்வார். அந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.

    கிருஷ்ணா நீர் கழகம் ரூ.500 கோடி, காவேரி நீர்ப்பாசன கழகம் ரூ.200 கோடி, விசுவேஸ்வரய்யா நீர் கழகம் ரூ.250 கோடி, கர்நாடக நீர்ப்பாசன கழகம் ரூ.650 கோடி கடன் பெற அரசு உத்தரவாதம் வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒசப்பேட்டையில் ரூ.13.85 கோடியில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை வளாகம் அமைக்கப்படும். அடுத்த ஆண்டு (2021) 21 பொது விடுமுறை நாட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 19 நாட்கள் கட்டுப்பாடுகளுடன் விடுமுறை வழங்கப்படும். அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி இல்லாமலேயே அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு மந்திரி மாதுசாமி கூறினார்.
    Next Story
    ×