search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா
    X
    தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா

    தமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் - தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா உறுதி

    கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் தமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா உறுதிபட தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் பீகாரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இந்த தேர்தலில் மக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதற்கு தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

    குறிப்பாக மக்கள் நெரிசலின்றி ஓட்டுப்போடுவதற்காக வாக்குச்சாவடிகளை அதிகரிக்கப்பட்டது. அந்தவகையில் 1000 முதல் 1500 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் பூத்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் கூடுதலாக 33 ஆயிரம் வாக்குச்சாவடிகள் புதிதாக நிறுவப்பட்டன.

    இதைப்போல தேர்தல் பணியாற்றிய அதிகாரிகள், பாதுகாப்பு படையினருக்கு முககவசம், கையுறைகள், சானிடைசர் பாட்டில்கள் என தடுப்பு பொருட்களை தேர்தல் கமிஷன் வழங்கியது. மேலும் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திர பொத்தானை அழுத்துவதற்காகவும், கையெழுத்து போடவும் அவர்களுக்கும் ஒரு கைக்கு மட்டும் பாலித்தீனால் செய்யப்பட்ட கையுறை வழங்கப்பட்டன.

    இவ்வாறு மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டதால், கொரோனா அச்சுறுத்தல் இன்றி வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை முடித்து புதிய அரசும் பதவியேற்று உள்ளது.

    பீகார் தேர்தலை வெற்றிகரமாக முடித்துள்ள தேர்தல் கமிஷனுக்கு அடுத்தகட்ட சவாலாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் அமைந்துள்ளன. அதாவது அடுத்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் தமிழகம், மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

    இதுகுறித்தும், பீகார் தேர்தல் அனுபவங்கள் குறித்தும் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனாவுக்கு மத்தியில் பீகார் தேர்தலுக்காக தேர்தல் கமிஷன் தயாரானபோது, இது மடத்தனம் என சிலர் நினைத்தனர். அதாவது தொற்று நோய்க்கு மத்தியில் தேர்தல் நடத்துவது தவறான முயற்சி என்ற உணர்வுகள் பலதரப்பிலும் காணப்பட்டன.

    ஆனால் தேர்தல் கமிஷனில் உள்ள ஒவ்வொருவருக்கும் இது நம்பிக்கையின் பாய்ச்சலாகவே இருந்தது. இந்த தேர்தலுக்கு பின்னணியில் ஏராளமான முன்னேற்பாடுகள் உள்ளன. எல்லா தேர்தலுக்கும் எங்களின் கடின உழைப்பு தேவைப்படும். ஆனால் கொரோனாவுக்கு மத்தியில் நடந்த இந்த தேர்தல் எங்களுக்கு கடினமான மற்றும் சவாலான பணியாக மாறியது.

    எனினும் வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். இதன்மூலம் தேர்தல் கமிஷன் மீது வைக்கப்பட்ட கேள்விகளை தவறு என நிரூபித்துள்ளோம். இந்த முறை தேர்தலில் ஒரு முக்கிய கூறு சேர்க்கப்பட்டு உள்ளது. அது பாதுகாப்பான தேர்தல் ஆகும். அதாவது வாக்காளர்களுக்கு பாதுகாப்பு, தேர்தல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு, அனைத்து சம்பந்தப்பட்ட துறையினருக்கும் பாதுகாப்பு போன்றவை ஆகும்.

    தேர்தல் என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நடைமுறை. அந்த விஷயத்தில் நாங்கள் ஒருபோதும் ஓய்ந்திருக்க மாட்டோம். அந்தவகையில் அடுத்த ஆண்டு (2021) நடைபெறும் தேர்தல்களும் (தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள்) சரியான நேரத்தில் நடைபெறும். அவற்றுக்கான உள்ளார்ந்த பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது.

    இவ்வாறு தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறினார்.

    கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்தாலும், அடுத்தகட்ட தேர்தல்கள் குறித்த நேரத்தில் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அரோரா, ‘எனது பணிக்காலம் ஏப்ரல் 13, 2021 வரை உள்ளது. அதுவரை எந்த தேர்தல் வந்தாலும், குறித்த நேரத்தில் நடத்தப்படும்’ என்று உறுதியுடன் தெரிவித்தார்.
    Next Story
    ×