search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பயங்கரவாதத்துக்கு துணைபோகிற நாட்டை குற்றவாளி என உறுதி செய்யவேண்டும் - பிரதமர் மோடி

    பயங்கரவாதத்துக்கு துணை போகிற நாடுகளை குற்றவாளிகள் என உறுதி செய்யவேண்டும் என்று ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக பேசினார்.
    புதுடெல்லி:

    ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் காணொலி காட்சி வழியாக பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானை கடுமையாக சாடினார். அவர் பயங்கரவாதத்துக்கு துணை போகிற நாடுகளை குற்றவாளிகள் என உறுதி செய்யவேண்டும் என்று கூறினார்.

    நமது அண்டை நாடான பாகிஸ்தான், தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி, படை வீரர்களையும், அப்பாவி பொதுமக்களையும் கொல்வதற்கு அந்த நாடு உதவிக்கரம் நீட்டுகிறது. மும்பை தாக்குதல் தொடங்கி புல்வாமா தாக்குதல் வரை பாகிஸ்தான் அரசு ஆதரவுடன்தான் பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன.

    இந்த நிலையில், உலக மக்கள் தொகையில் பாதியை கொண்டுள்ள (சுமார் 360 கோடி) பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டு அமைப்பான ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 12-வது உச்சி மாநாடு, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடந்தது.

    காணொலி காட்சி வழியாக நடந்த இந்த மாநாட்டுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தலைமை தாங்கினார்.

    இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி இந்த உச்சி மாநாட்டில் பேசியபோது உலகளாவிய பயங்கரவாதத்தை கடுமையாக விமர்சித்தார். பிராந்திய அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதத்துக்கு துணை போய்க்கொண்டிருக்கிற அண்டை நாடான பாகிஸ்தானை அவர் பெயர் குறிப்பிடாமல் சாடினார்.

    அவர் பேசியதாவது:-

    இந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் கருப்பொருளான, உலகளாவிய நிலைத்தன்மை, பகிரப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி என்பது சம காலம் மட்டுமல்ல, எதிர்காலமும் ஆகும்.

    உலகம் பெரிய புவிசார் பாதுகாப்பு மாற்றங்களை கவனிக்கிறது. இதன் விளைவுகள் நிலைத்தன்மை, பாதுகாப்பு, வளர்ச்சியில் தொடரும்.

    இது ஐ.நா. சபை நிறுவப்பட்டதன் 75-வது ஆண்டு ஆகும். பன்முகத்தன்மையின் முக்கிய ஆதரவாளராக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவின் பாரம்பரியத்தில் முழு உலகமும் ஒரே குடும்பமாக கருதப்படுகிறது. ஐ.நா. சபையின் மதிப்புகள் மீதான எங்கள் அர்ப்பணிப்பு மிக முக்கியமானது.

    உலகளாவிய அமைப்புகளின் செயல்திறன் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம், அவை, மாறும் காலத்துக்கு ஏற்ப மாறாததுதான்.

    சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.), உலக வர்த்தக அமைப்பு (டபிள்யு.டி.ஓ.), உலக சுகாதார அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.) ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

    பயங்கரவாதம் இன்றைக்கு உலகம் எதிர்கொள்கிற மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.

    பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிற நாடுகள், உதவி செய்யும் நாடுகள் (பாகிஸ்தான்) குற்றவாளிகள் என உறுதி செய்ய வேண்டும். அதற்கு அவசியம் உள்ளது.

    பயங்கரவாத பிரச்சினை, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கையாளப்பட வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்கிறது.

    இந்தியா மருந்து துறையில் வலிமையாக இருக்கிறது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் நாங்கள் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் வழங்க முடிந்திருக்கிறது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பு மற்றும் வினியோக திறன் காரணமாக இந்தியா மனித குலத்துக்கு அதே வழியில் உதவும்.

    எங்கள் அரசு சுய சார்பு இந்தியா பிரசாரத்தை கையில் எடுத்துள்ளது. நாங்கள் இந்த திட்டத்தின்கீழ் ஒரு விரிவான சீர்திருத்த செயல்முறையை தொடங்கி இருக்கிறோம். இந்தியாவின் சுயசார்பும், குதித்தெழும் ஆற்றலும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்துக்கு பிந்தைய உலக பொருளாதாரத்துக்கு ஒரு சக்தி பெருக்கமாக இருக்க முடியும், வலுவான பங்களிப்பை செய்ய முடியும்.

    இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.
    Next Story
    ×