search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா
    X
    அமித்ஷா

    ‘இந்திய மக்கள் இனியும் பொறுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள்’ - அமித்ஷா டுவீட்

    தேச நலனுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை இந்திய மக்கள் இனியும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் இருந்த காஷ்மீர் முதல்மந்திரிகளான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் தற்போது விடுதலையாகியுள்ளனர்.

    விடுதலையானதை தொடர்ந்து மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா, தேசிய மாநாட்டுக்கட்சியின் பரூக், உமர் அப்துல்லா உள்பட காஷ்மீர் முக்கிய அரசியல்வாதிகள் இணைந்து காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் நோக்கத்தோடு குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுளது.

    குப்கர் பிரகடனம் என்பது காஷ்மீரின் சுய ஆட்சி, சிறப்பு அந்தஸ்து, தனித்தன்மையை ஒருங்கிணைந்து பாதுகாக்க காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக்கட்சி உள்ளிட்ட  கட்சிகள் துணைநிற்கும் என்பதாகும்.

    இதற்கிடையில், கடந்த சில நாட்களாக மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை சீனாவின் உதவியுடன் மீண்டும் கொண்டுவருவோம் என பரூக் அப்துல்லா கூறியிருந்தார். காஷ்மீர் கொடி ஏறினால்தான் இந்திய தேசிய கொடியை ஏற்றுவோம் என மெகபூபா
    கூறியிருந்தார்.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

    அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-

    குப்கர் கூட்டணி உலக அளவில் சென்றுகொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் வெளிநாட்டு படைகளின் தலையீடுகளை கொண்டுவர அவர்கள் நினைக்கின்றனர். 

    குப்கர் கூட்டணி இந்திய தேசியக்கொடியையும் அவமரியாதை செய்துள்ளது. குப்கர் கூட்டணியின் இதுபோன்ற செயல்களை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஆதரிக்கின்றனரா? தங்கள் நிலைப்பாட்டை அவர்கள் இந்திய மக்களுக்கு வெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீரை பதற்றமும், பயங்கரவாதமும் நிறைந்த பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என காங்கிரசும் குப்கர் கூட்டணியும் நினைக்கின்றனர். 

    சிறப்பு அந்தஸ்து 370-ஐ நீக்கியதால் பெண்களும், தலித்களும், பழங்குடியினரும் பெற்றுள்ள உரிமைகளை அவர்கள் திரும்பப்பெற நினைக்கின்றனர். இதனால் தான் அவர்கள் மக்களால் எல்லா இடங்களிலும் புறக்கணிக்கப்படுகின்றனர்.

    ஜம்மு காஷ்மீர் அப்போதும், இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும். தேச நலனுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள புனிதமற்ற உலகளாவிய கூட்டணியை இந்திய மக்கள் இனியும் பொறுத்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். நாட்டின் மனநிலையுடன் இணைந்து குப்கர் கூட்டணி நீந்தவேண்டும் அல்லது மக்கள் அந்த கூட்டணியை மூழ்கடித்துவிடுவார்கள்

    என்றார். 
    Next Story
    ×