search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா, பிரியங்கா, ராகுல் காந்தி
    X
    சோனியா, பிரியங்கா, ராகுல் காந்தி

    நாங்கள் சொல்வதை கேட்கவில்லை...முடிவுகளை அனைவரும் பார்க்கின்றனர் - காங்.தலைமையை சாடிய கபில் சிபல்

    பீகார் தேர்தல் தோல்வி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் தலைமையை அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. 

    பீகார் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி தோல்வியடைந்ததற்கு 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளில் வெற்றிபெற்றதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

    இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தலைமையில் பெரும் மாற்றம் வேண்டும் என கடந்த ஆக்ஸ்ட் மாதம் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். தலைமைக்கு கடிதம் எழுதியவர்களில் மூத்த தலைவரான கபில் சிபலும் ஒருவர். 

    இந்நிலையில், பீகார் தேர்தல் தோல்வி உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு கபில் சிபல் சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார். 

    அந்த பேட்டியில் கபில் சிபல் கூறியவாதவது:-

    பாஜக-வுக்கு எதிராக வலுவான மாற்றுக்கட்சியாக மக்களால் காங்கிரஸ் பார்க்கப்படவில்லை. கட்சி பிரச்சனைகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாகவும் எங்களில் சிலர் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தோம்.

    ஆனால், அவர்கள் நாங்கள் சொல்வதை கேட்பதற்கு பதிலாக எங்களுக்கு எதிராகவே திரும்புகின்றனர். அதற்கான முடிவுகளை அனைவரும் பார்க்கின்றனர். உள்கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபவது தொடர்பாக காங்கிரஸ் தலைமை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 

    எனது கருத்தை வெளிப்படுத்த வழி இல்லாதபோது அதை பொதுவெளியில் தெரிவிக்க நான் தள்ளப்படுகிறேன். 

    கடந்த 6 ஆண்டுகளில் சுய பரிசோதனை செய்யாதபோது இப்போது சுய பரிசோதனை செய்வதற்கான நம்பிக்கை எப்படி இருக்கும். காங்கிரசில் என்ன பிரச்சனை என்பது எங்களுக்கு தெரியும். 

    அமைப்பு ரீதியாக என்ன பிரச்சனை என்பது எங்களுக்கு தெரியும். அதற்கான பதில்களும் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அதற்கான பதில் தெரியும். ஆனால், அவர்கள் அந்த பதிலை ஏற்க மறுக்கின்றனர். இப்படியே இருந்தால் கட்சி தொடர்ந்து சரிவை சந்திக்கும். பிரச்சனைகளையும் அதிற்கான பதில்களையும் ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் தைரியமாக இருக்க வேண்டும்.

    என்றார்.
    Next Story
    ×