search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை: மந்திரி சுதாகர்

    கர்நாடகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
    பெங்களூரு :

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் தற்போது 2,300 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 30 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் சில மாவட்டங்களில் இந்த விதிமுறைப்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை. உலக வங்கியின் உதவியுடன் மாநிலத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்படும். தற்போது செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆரம்ப சுகாதார நிலையம் முதல் பெரிய ஆஸ்பத்திரி வரை சிகிச்சையின் தரத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். இதற்காக ஒரு முழுமையான செயல் திட்டம் வகுக்கப்படும். சில டாக்டர்கள் கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்க மறுக்கிறார்கள். சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அவர்கள் பணியாற்றும் இடத்தை பொறுத்து பதவி உயர்வு, பணி இடமாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    1,250 எம்.பி.பி.எஸ். டாக்டர்கள், 950 மருத்துவ நிபுணர்கள் உள்பட புதிதாக 2,500 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சுகாதார மையங்களுக்கு புதிய டாக்டர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதே போல் துணை மருத்துவ ஊழியர்கள், நர்சுகளும் நியமனம் செய்யப்பட உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்.

    கர்நாடகத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. பெங்களூருவில் மரண விகிதமும் 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புகளில் இருந்து தப்பிக்க மக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.
    Next Story
    ×