search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    பீகாரைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக இலக்கு

    பீகாரைத் தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏராளமான பீகார் மக்கள் வசிப்பதால், அதன் தாக்கத்தை பயன்படுத்தி, அம்மாநிலத்தையும் கைப்பற்றிவிட முடியும் என்று கருதுகிறது.
    புதுடெல்லி :

    நடந்து முடிந்த பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி, ஆட்சியை தக்க வைத்துள்ளது. கடும் இழுபறிக்கு பிறகு, நூலிழை வித்தியாசத்தில் ஆட்சி பறிபோகாமல் காப்பாற்றிக்கொண்டுள்ளது.

    மேலும், 11 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்த தொடர் வெற்றியால் பா.ஜனதா ஊக்கம் அடைந்துள்ளது. பீகாரைத் தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது.

    அதற்கேற்ப சமீபத்தில் அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தார்.

    மேற்கு வங்காளத்தில், 20 ஆண்டுகளுக்கு மேல் நடந்த இடதுசாரி ஆட்சியை வீழ்த்தி, கடந்த 2011-ம் ஆண்டு, மம்தா பானர்ஜி ஆட்சியை பிடித்தார். 2016-ம் ஆண்டு தேர்தலிலும் அவரே வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் பா.ஜனதா வெறும் 3 சட்டசபை தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது.

    ஆனால், கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஓரங்கட்டி, திரிணாமுல் காங்கிரசுக்கு நேரடி போட்டியாக உருவெடுத்துள்ளது.

    இதே வேகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதவாக்கில் நடைபெறும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

    இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:-

    பீகார் தேர்தல் வெற்றி, பா.ஜனதாவுக்கு ஊக்கம் அளித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏராளமான பீகார் மக்கள் வசிப்பதால், அதன் தாக்கத்தை பயன்படுத்தி, அம்மாநிலத்தையும் கைப்பற்றிவிட முடியும் என்று கருதுகிறது.

    ஆனால், மேற்கு வங்காளத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம். குடியுரிமை திருத்த சட்டத்தால், அவர்கள் பா.ஜனதா மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

    மேலும், மம்தா பானர்ஜிக்கு போட்டியாக பிரபலமான முகம் எதுவும் பா.ஜனதாவில் இல்லை. கோஷ்டி பூசலும் நிலவி வருகிறது. இவையெல்லாம் பா.ஜனதாவுக்கு தடைக்கற்களாக உள்ளன.

    அதே சமயத்தில், கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை மறைத்ததாக மம்தா அரசு மீது மக்கள் கோபம் கொண்டுள்ளனர். கடந்த மே மாதம், அம்பான் புயல் தாக்கியபோது, நிவாரண பணிகளில் நடந்த ஊழலும் மம்தா அரசுக்கு பின்னடைவாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×