search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேட்டுக்கு வழியில்லை - தேர்தல் ஆணையம் உறுதி

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேட்டுக்கு வழியில்லை என்று தேர்தல் ஆணையம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பீகார் தேர்தல் முடிவுகளை ஒட்டி சில அரசியல் கட்சி தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அவற்றில் முறைகேட்டுக்கு வழியில்லை என்று தேர்தல் ஆணையம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

    நேற்று பீகார் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியபோது, எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு எதிராக ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னணி இடங்களைப் பெற்றுவந்தது. அந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் உதித் ராஜ் சந்தேகம் எழுப்பினார்.

    இதற்கிடையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின் கூறியதாவது:-

    “மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வலுவானவை, முறைகேட்டுக்கு வழியில்லாதவை என்று பலமுறை தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அதை உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யலாம் என நிரூபிக்க முடியுமா என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒரு சவால் கூட விடுத்தது. ஆக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாக எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை.”

    இவ்வாறு அவர் கூறினார்.

    ‘செவ்வாய், நிலவுக்கான செயற்கைகோள்களை பூமியில் இருந்து கட்டுப்படுத்தும்போது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏன் முறைகேடு செய்ய முடியாது? அமெரிக்காவில் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், டிரம்ப் தோல்வி அடைந்திருப்பாரா?’ என்று உதித் ராஜ் டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

    ஆனால் அதே காங்கிரஸ் கட்சி எம்.பி.யான கார்த்தி சிதம்பரம், ‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வலுவானவை, துல்லியமானவை, நம்பகமானவை. தேர்தலில் தோல்வி அடையும் அரசியல் கட்சியினர் மின்னணு எந்திரங்களை குற்றம்சாட்டுவது வழக்கமானது தான்’ என்று தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
    Next Story
    ×