search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள்
    X
    இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள்

    பீகார் தேர்தல் - பதிவான 4.10 கோடி வாக்குகளில் இதுவரை 1 கோடி வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன - தேர்தல் ஆணையம்

    பீகார் தேர்தலில் 4 கோடியே 10 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
    பாட்னா:

    243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. பீகாரில் ஆட்சியை கைப்பற்ற 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

    தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வழக்கமாக வாக்குஎண்ணிக்கை தொடங்கிய சில மணிநேரங்களில் வெற்றியாளர்களின் முடிவுகள் பெரும்பாலும் தெரிந்துவிடும். ஆனால், தற்போதைய பீகார் தேர்தல் முன்னனி நிலவரம் நிமிடத்திற்கு நிமிடம் மாறுபடுகிறது. 

    வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ள கட்சிகளின் நிலவரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மதியம் 1.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் முன்னனி நிலவரங்கள் வெளியாகியுள்ளது.

    அதன்படி, நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக தலைமையிலான கூட்டணி 127 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 106 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சி 2 இடத்திலும், அசாதுதீன் ஒவாய்சியின் ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி 3 இடத்திலும், சிரங் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 1 இடங்களிலும், சுயேட்சைகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.     

    வாக்கு எண்ணிக்கை கொரோனா வைரஸ் தொடர்பான பாதுகாப்பு நடைமுறை காரணமாக தாமதமாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து பீகார் மாநில தேர்தல் ஆணையர் ஸ்ரீனிவாஸ் (மதியம் 1.30 மணியளவில்) கூறியதாவது:-

    மொத்தம் 4 கோடியே 10 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுவரை 92 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வாக்கு எண்ணிக்கை 25 முதல் 26 சுற்றுகளாக எண்ணப்படும்.

    ஆனால் இந்த முறை 35 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆகையால், வாக்கு எண்ணிக்கை மாலை வேலை வரை நடைபெறும்.

    சில தொகுதிகளில் 24 முதல் 25 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து விடும். ஆனால் சில தொகுதிகளில் 50 முதல் 51 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதனால், தொகுதிக்கு சராசரியாக 30 முதல் 35 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

    என்றார்.

    அதேபோல் மதியம் 1.45 மணியளவில் புதுடெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் துணை தலைமை தேர்தல் ஆணையர் சுந்தீப் ஜெயின் உள்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் (1.45 மணியளவில்) கூறியதாவது:-

    தற்போதுவரை எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் வாக்குஎண்ணிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. 1 கோடிக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இன்னும் குறிப்பிட்ட தகுந்த அளவில் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். 

    சட்டப்படி 8 மணிக்கு முன்னதாக வந்த அனைத்து தபால் வாக்குகளும் எண்ணப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வலுவானவை மற்றும் எந்தவித
    இடையூறுகளுக்கு உட்படுத்த முடியாதவை என்பதை மீண்டும் உறுதிபடுத்தி கூறுகிறோம். வாக்குப்பதிவு எந்திரம் மீதான நம்பிக்கையை உச்சநீதிமன்றம் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை உறுதி படுத்தியுள்ளது.

    வாக்குப்பதிவு எந்திரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா? என்பது குறித்து 2017-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் சவால் விட்டிருந்தது. வாக்குப்பதிவு எந்திரம் மீதான நம்பிக்கை தொடர்பாக மேலும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறோம்

    என தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×