search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகத்சிங் கோஷ்யாரி - அர்னாப்
    X
    பகத்சிங் கோஷ்யாரி - அர்னாப்

    அர்னாப்பை குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்க வேண்டும் - மந்திரியிடம் கோரிக்கை விடுத்த கவர்னர்

    சிறையில் உள்ள அர்னாப் கோஸ்வாமியை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என மகாராஷ்டிர உள்துறை மந்திரிக்கு அம்மாநில கவர்னர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    மும்பை:

    மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்தவா் கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் (53). இவருக்கு கட்டிட உள்வடிவமைப்பு பணிகள் செய்ததற்கான நிலுவை தொகையை ரிபப்ளிக் டி.வி. ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி(47) வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. 

    கடந்த 2018-ம் ஆண்டு அன்வய் நாயக் அலிபாக்கில் உள்ள வீட்டில் தாயுடன் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேர் மீது விசாரணை நடைபெற்றது. ஆனால், இந்த வழக்கு 2018-ம் ஆண்டே மூடப்பட்டது.

    இதற்கிடையில், மூடப்பட்ட இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசாருக்கு மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் உத்தரவிட்டார்.

    இதையடுத்து, கட்டிட வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியை கடந்த வாரம் புதன்கிழமை அலிபாக் நகர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பெரோஸ் சேக், நிதேஷ் சர்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேரையும் வருகிற 18-ம் தேதி வரை கோர்ட்டு காவலில் அடைக்க அலிபாக் கோர்ட்டு உத்தரவிட்டது. கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் அலிபாக்கில் உள்ள பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

    ஆனால், போலீசாருக்கு தெரியாமல் அங்கு கோஸ்வாமி சிறையில் செல்போன் பயன்படுத்தியதால் ரைகாட் மாவட்டத்தில் உள்ள டலோஜா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.  

    இதற்கிடையே, தனக்கு ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் அர்னாப் கோஸ்வாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் அடங்கிய அமர்வு அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. மேலும், கோஸ்வாமி தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது. 

    கோஸ்வாமி ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என அறிவுரை வழங்கியது. மும்பை ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து சிறையில் உள்ள ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அலிபாக் கீழமை நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமி கைது தொடர்பாக மகாராஷ்டிர உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கை அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் தொடர்பாக கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கை தொடர்பு கொண்டு பேசினார். மேலும், அர்னாப்பின் குடும்பத்தினர் அவரை சந்தித்த் பேச அனுமதி தரவேண்டும் என உள்துறை மந்திரியிடம் கவர்னர் வேண்டுகோள் விடுத்தார். 

    என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×