search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி நிதின் கட்காரி
    X
    மத்திய மந்திரி நிதின் கட்காரி

    மூங்கிலில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்க திட்டம் - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்

    மூங்கிலில் இருந்து விமானத்திற்கான எரிபொருள் தயாரிக்கும் திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
    மும்பை:

    மராட்டிய மாநிலம் நாக்பூரில் சுயசார்பு இந்தியாவுக்கான ‘ஆத்மநிர்பார் பாரத்’ சேவை அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    மூங்கிலில் இருந்து விமான எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான திட்டம் குறித்த ஆலோசனையை மேற்கொண்டு வருகிறேன். இதற்கான மூங்கில்கள் கட்சிரோலி மாவட்டத்தில் இருந்து பெறப்படும். இவற்றை கொண்டு விமான எரிபொருள் உற்பத்தி செய்வதற்காக ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளேன். இதற்கான பணிகளை இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டேன். இந்த எரிபொருளில் விமானங்கள் இயங்குவதை விரைவில் அனைவருக்கும் காண்பிப்பேன்.

    பிரதமர் மோடி ‘ஆத்மநிர்பார் பாரத்’ எனப்படும் சுயசார்பு இந்தியா கொள்கையை உருவாக்கியுள்ளார். பிரதமர் கொண்டுவந்துள்ள இத்திட்டம் இந்தியாவை மகிழ்ச்சியான, முற்போக்கான, வளமான தேசமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டதாகும். இதேபோன்ற இன்னொரு கருத்தாக்கம் ‘அந்தியோதயா’ ஆகும். இது வளர்ச்சிக்கான சமூக பொருளாதார சிந்தனை. இது பாரதீய ஜன சங்கத்தின் இணை நிறுவனர் தீனதயாள் உபாத்யாய் உருவாக்கியது. இத்தகைய கொள்கையும் நம் நாட்டிற்குத் தேவை. இது கடைசி மனிதனுக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்கவேண்டும் என்பதை பற்றி பேசியுள்ளது.

    நாக்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 10,000 பேருக்கு சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிறுதொழில் திட்டங்களை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்.
    Next Story
    ×