search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சாமானிய மக்களுக்கு 2022-ம் ஆண்டுதான் தடுப்பூசி கிடைக்கும் - எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் பேட்டி

    கொரோனா தடுப்பூசி, சாமானிய மக்களுக்கு 2022-ம் ஆண்டுதான் கிடைக்கும் என்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறினார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி எப்போது வரும் என நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து உருவாக்கியுள்ள கோவேக்சின் சந்தைக்கு வரக்கூடும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

    இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் இயக்குனரும், கொரோனா வைரஸ் மேலாண்மை குறித்த தேசிய பணிக்குழுவின் உறுப்பினருமாகிய டாக்டர் ரன்தீப் குலேரியா ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நமது நாட்டில் சாமானிய மக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 2022-ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும். இந்திய சந்தையில் கொரோனா தடுப்பூசி எளிதில் கிடைப்பதற்கு ஒரு வருடத்துக்கு மேல் ஆகும்.

    நமது நாட்டில் மக்கள் தொகை மிகவும் அதிகம். சந்தையில் இருந்து காய்ச்சல் தடுப்பூசி போன்று கொரோனா தடுப்பூசியை எவ்வாறு வாங்க முடியும் என்பதை பார்க்க எங்களுக்கு அவகாசம் தேவைப்படுகிறது.

    கொரோனா தடுப்பூசி கிடைத்த பிறகு நாடு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்று கேட்டால், முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது வினியோகம்தான். தடுப்பூசி நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடையும் வகையில் வினியோகம் இருக்க வேண்டும்.

    குளிர்பதன கிடங்குளை பராமரிக்க வேண்டியதிருக்கிறது. தேவையான எண்ணிக்கையில் சிரிஞ்சுகள் வேண்டும். போதுமான ஊசிகள் வேண்டும். நாட்டின் கடைக்கோடி பகுதிக்கும் தங்குதடையின்றி கொரோனா தடுப்பூசியை வழங்குவது மிகப்பெரிய சவால் ஆகும்.

    அடுத்த சவால், பின்னால் வருகிற மற்றொரு தடுப்பூசியின் நிலைப்பாட்டை கண்டறிவதாகும். ஏனென்றால், பின்னர் வருகிற தடுப்பூசி, முதலில் வருகிற தடுப்பூசியை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை எப்படி நிலைநிறுத்துவது? யாருக்கு முதலில் வந்த தடுப்பூசியை போடுவது, யாருக்கு பின்னர் வந்த தடுப்பூசியை போடுவது என்று எவ்வாறு தீர்மானிப்பது? நிறைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியதிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×