search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கருப்பு பணம் குறையவும், வரி கட்டுதல் அதிகரிக்கவும் பணமதிப்பிழப்பு உதவியது- பிரதமர் மோடி

    கருப்பு பணம் குறையவும், வரி கட்டுதல் அதிகரிக்கவும் பணமதிப்பிழப்பு உதவியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ந்தேதி உரையாற்றும்பொழுது, ஊழல் மற்றும் கருப்பு பணம் ஆகியவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கையாக பணமதிப்பிழப்பு பற்றிய அறிவிப்பினை வெளியிட்டார்.

    இந்நடவடிக்கையானது, ஊழல், கருப்பு பணம் மற்றும் போலி ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் பொதுஜனத்தின் கரங்களை வலுப்படுத்தும் என கூறினார்.

    அவர் அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து, ஒவ்வோர் ஆண்டும் அந்த நாள் வரும்போதும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து, போராட்டங்கள், பேரணிகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கொண்டுவந்து இன்றுடன் 4-வது ஆண்டு நிறைவு பெறுகிறது.

    இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ந்தேதி பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மக்களின் நலனுக்காக கொண்டு வரப்படவில்லை.

    இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா வைரஸ்தான் காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கொரோனாதான் காரணமாக இருந்தால், வங்கதேசத்திலும் கொரோனா பாதிப்பு இருந்தது. உலகின் பலநாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால், எவ்வாறு இந்திய பொருளாதாரத்தை வங்கதேசம் முந்தி சென்றது. ஆதலால், பொருளாதார சீரழிவுக்கு கொரோனா வைரஸ் காரணம் அல்ல. உண்மையான காரணம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி வரியும்தான்.

    இந்தியாவின் பெருமையையும், பொருளாதாரத்தையும் அழித்துவிட்டார் மோடி. நாம் அனைவரும் சேர்ந்து இந்தியாவை மறுகட்டமைப்பு செய்வோம் என்று அதில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கருப்பு பணம் குறையவும், அரசுக்கு வரி செலுத்துவோரின் வரி கட்டுதல் அதிகரிக்கவும் மற்றும் முறைப்படுத்தவும் பணமதிப்பிழப்பு உதவியது. வெளிப்படை தன்மைக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் அது அமைந்தது. இதன் வெளிப்பாடுகள் தேச வளர்ச்சிக்கு பெருமளவில் பலனளித்தன என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×