search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறைந்த தொழில் அதிபர் சித்தார்த்தின் மனைவி மாளவிகா
    X
    மறைந்த தொழில் அதிபர் சித்தார்த்தின் மனைவி மாளவிகா

    காசோலை மோசடி வழக்கில் எஸ்.எம்.கிருஷ்ணா மகளுக்கு முன்ஜாமீன்

    காசோலை மோசடி வழக்கில் எஸ்.எம்.கிருஷ்ணா மகளும், ஏ.பி.சி. நிறுவனத்தின் அதிகாரியும், சித்தார்த்தின் மனைவியுமான மாளவிகாவிற்கு கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் மாளவிகா கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.
    முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த். கபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளரான இவர் பல ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆவார். இவரது சொந்த ஊர் சிக்கமகளூரு ஆகும். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு தட்சிணகன்னடா மங்களூரு அருகே ஆற்றில் குதித்து சித்தார்த் தற்கொலை செய்துகொண்டார்.

    அவரது தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் சித்தார்த்துக்கு சொந்தமான ஏ.பி.சி. காபி நிறுவனத்துக்கு சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காபி தோட்ட அதிபர்கள், காபி கொட்டைகளை விற்பனை செய்திருந்தனர். ஆனால் ஏ.பி.சி. நிறுவனம், அவர்களுக்கு கொள்முதல் செய்த காபி கொட்டைகளுக்கு பணம் வழங்கவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட காபி தோட்ட அதிபர்கள், ஏ.பி.சி. நிறுவனத்தின் அதிகாரியும், சித்தார்த்தின் மனைவியுமான மாளவிகா உள்பட 8 பேர் மீது சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள மூடிகெரே ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மாளவிகா கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

    இதனால் மாளவிகா உள்பட 8 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து முன்ஜாமீன் கோரி மாளவிகா உள்பட 8 பேரும் மூடிகெரே கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் மாளவிகா உள்பட 5 பேருக்கு கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் மாளவிகா கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.
    Next Story
    ×