search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசியபோது எடுத்த படம்.
    X
    டெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசியபோது எடுத்த படம்.

    வெங்கையா நாயுடுவுடன் தமிழக கவர்னர் சந்திப்பு

    டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார்.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நேற்று முன்தினம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அன்று காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற அவர், சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை 4.30 மணிக்கு பிரதமர் இல்லத்திற்கு சென்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார்.

    சுமார் ½ மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்தும், தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் அவர் பேசியதாக தெரிகிறது.

    தொடர்ந்து, உள்துறை மந்திரி அமித்ஷா, பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிஜேந்திர சிங் ஆகியோரையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். அவரிடமும் தமிழக முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசியதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×