search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத்சிங்
    X
    ராஜ்நாத்சிங்

    இறையாண்மையை பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது - ராஜ்நாத்சிங் திட்டவட்டம்

    ஆக்கிரமிப்பை எதிர்நோக்கி வருவதால், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
    புதுடெல்லி:

    தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வைரவிழாவையொட்டி காணொலி காட்சி மூலம் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    இந்தியா, அமைதியை விரும்பும் நாடு. கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகளாக உருவெடுக்கக்கூடாது என்று கருதுகிறோம்.

    கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி தீர்வு காணலாம் என்பதில் நம்பிக்கை கொண்ட நாடு. அதனால்தான், எல்லை பிரச்சினை தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை இந்தியா மதித்து நடந்துள்ளது.

    இருப்பினும், ஆக்கிரமிப்பை எதிர்நோக்கி வருவதால், நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வோம். போரை தடுக்கக்கூடிய திறமையால்தான் அமைதியை நிலைநாட்ட முடியும். அதற்காக உள்நாட்டிலேயே பாதுகாப்பு தளவாட உற்பத்தியை அதிகரிக்க பாடுபட்டு வருகிறோம்.

    கடந்த 6 ஆண்டுகளில், ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் நட்புறவை உருவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அதனால், அமெரிக்காவுடனான பாதுகாப்பு முக்கியத்துவம்வாய்ந்த உறவு, முன்பைவிட வலிமையாக இருக்கிறது.

    அதுபோல், ஜப்பானுடனான நட்புறவு அபரிமிதமாக வளர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவுடனும் நட்புறவு அதிகரித்துள்ளது. இந்தியாவும், ரஷியாவும் கடந்த காலங்களில் பல சவால்களை முறியடித்துள்ளன. ரஷியாவுடன் நமது உறவு தொடர்கிறது.

    பாகிஸ்தானை பொறுத்தவரை, பயங்கரவாதத்தை பயன்படுத்துவதை அரசின் கொள்கையாகவே பிடிவாதமாக கடைப்பிடித்து வருகிறது.

    அதன் பிற்போக்கு கொள்கைகளை அம்பலப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றதுடன், முன்புபோல் மற்ற நாடுகளுடன் பாகிஸ்தான் நட்புறவை கொள்வதை கடினமாக்கி இருக்கிறோம்.

    இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
    Next Story
    ×