search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறைந்த தொழில் அதிபர் சித்தார்த்தின் மனைவி மாளவிகா
    X
    மறைந்த தொழில் அதிபர் சித்தார்த்தின் மனைவி மாளவிகா

    மறைந்த தொழில் அதிபர் சித்தார்த்தின் மனைவி மாளவிகாவுக்கு பிடிவாரண்டு

    காசோலை மோசடி வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால் முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகளும், மறைந்த தொழில் அதிபர் சித்தார்த்தின் மனைவியுமான மாளவிகாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சிக்கமகளூரு :

    முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த். தொழில் அதிபரான சித்தார்த் பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆவார். மேலும் அவர் உலகம் முழுவதும் ‘கபே காபி டே’ எனும் தேனீர் ஓட்டலை நிறுவி பிரபலம் அடைந்தார். சிக்கமகளூரு மாவட்டம்தான் சித்தார்த்தின் சொந்த ஊர் ஆகும். அங்கு அவருக்கு பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காபி தொழிற்சாலை, காபி தோட்டங்கள் உள்ளன. மேலும் ஏராளமான தொழிற்சாலைகள், கணினி நிறுவனங்களையும் சித்தார்த் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே ஆற்றில் குதித்து சித்தார்த் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை சம்பவம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ரூ.8 ஆயிரம் கோடி கடன் பிரச்சினையால் சித்தார்த் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

    சித்தார்த் தற்கொலை செய்து கொண்டதும், அவருக்கு கடன் கொடுத்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான நிதி அமைப்புகள் சித்தார்த்தின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் கடன் தொகையை திருப்பிக்கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் சித்தார்த்துக்கு சொந்தமான ஏ.பி.சி. காபி நிறுவனத்திற்கு சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காபித்தோட்ட அதிபர்கள் காபி கொட்டைகளை வழங்கி உள்ளனர். அதாவது ஏ.பி.சி. நிறுவனம், காபி கொட்டைகளை கொள்முதல் செய்திருந்தது.

    அதற்கான பணத்தை காசோலையாக ஏ.பி.சி. நிறுவனம் கொடுத்திருந்தது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் அந்த காசோலையை பணமாக ஈட்ட முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த காபித்தோட்ட அதிபர்கள் இதுபற்றி ஏ.பி.சி. நிறுவன அதிகாரிகளிடமும், சித்தார்த்தின் குடும்பத்தினரிடமும் கேட்டனர்.

    அப்போது அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த காபித்தோட்ட அதிபர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஏ.பி.சி. நிறுவனத்தின் அதிகாரியும், சித்தார்த்தின் மனைவியுமான மாளவிகா உள்பட 8 பேர் மீது சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள மூடிகெரே கோர்ட்டில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மாளவிகா உள்பட 8 பேரும் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு மூடிகெரே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் மாளவிகா உள்பட 8 பேரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. பலமுறை அறிவுறுத்தியும், எச்சரித்தும் மாளவிகா உள்பட 8 பேரும் கோர்ட்டில் ஆஜராகாததால் அவர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் மாளவிகா உள்பட 8 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த தீவிரம் காட்டி வருகிறார்கள். முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகளும், மறைந்த தொழில் அதிபர் சித்தார்த்தின் மனைவியுமான மாளவிகாவுக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×