search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி வினியோகத்துக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள்

    கொரோனா தடுப்பூசி வினியோகத்துக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரசை கட்டுப்படுத்தி குணப்படுத்துவதற்காக இந்தியாவில் நான்கு வகையான தடுப்பூசி பரிசோதனை நடந்து வருகின்றன. அதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஐதரபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.

    இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசு தடுப்பூசி வினியோகத்துக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தடுப்பூசிகளை இருப்பு வைப்பது, முதலில் யாருக்கு கொடுப்பது என்பது போன்ற பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசு அடுத்தடுத்த ஆலோசனைகளையும் நடத்தி புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போது சில புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசிகளை தன்னிச்சையாக கொள்முதல் செய்து பயன்படுத்த முடியாது என்று தெரிகிறது. அதுபோல தடுப்பூசி வினியோகத்தையும் தன்னிச்சையாக மாநில அரசுகள் முடிவு செய்ய இயலாது. மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வினியோக பணிகளை செய்ய வேண்டும் என்று மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

    குறிப்பாக தடுப்பூசி பயன்படுத்துவது மற்றும் வினியோக திட்டங்களை மத்திய அரசின் நிபுணர்குழு முடிவுக்கு ஏற்பவே செயல் படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக தடுப்பூசி வினியோக பணிகளில் மாநில அரசுகள் பட்டியல் மட்டும் தயாரித்து கொடுத்து விட்டு மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×