search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி
    X
    சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது: நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

    போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
    பெங்களூரு :

    கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்களை தவிர போதைப்பொருள் விற்பனையாளர்கள் லோயம் பெப்பர் சம்பா, பிரசாந்த் ரங்கா, பிரதிக் ஷெட்டி, நயாஸ், நடிகைகளின் நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், பெங்களூரு நகை வியாபாரி வைபவ் ஷெட்டி, சீனிவாஸ் சுப்பிரமணியன், பினால்டு உடேன் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் காட்டன்பேட்டை போலீசாரும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கில் நடிகை ராகிணி திவேதி 2-வது குற்றவாளியாகவும், சஞ்சனா கல்ராணி 14-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் திரைப்பட தயாரிப்பாளர் சிவபிரகாஷ் முதல் குற்றவாளியாகவும், முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா 6-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு உள்ளனர். சிவபிரகாசும், ஆதித்யா ஆல்வாவும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சீனப்பா நடிகைகளுக்கு ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டு இருந்தார். அதாவது சிறப்பு கோர்ட்டில் நடிகைகள் 5 முறைக்கு மேல் ஜாமீன் கேட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் அனைத்து தடவையும் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து இருந்தார்.

    இந்த நிலையில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். அதுபோல இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பிரசாந்த் ரங்காவும் ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    அந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதி சீனிவாஸ் ஹரீஷ்குமார் முன்னிலையில் நடந்தது. அப்போது நடிகைகள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் நடிகைகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். ராகிணி திவேதி சார்பில் ஆஜரான வக்கீல், ராகிணி திவேதியின் வீட்டில் இருந்து போதைப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

    அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல் நடிகைகளுக்கு ஜாமீன் வழங்கினால், அவர்கள் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நடிகைகளின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதுபோல பிரசாந்த் ரங்காவின் ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    இதனால் நடிகைகள் இருவரும், 2 நீதிபதிகள் அடங்கிய ஐகோர்ட்டு அமர்வில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×