search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வங்காள விரிகுடா கடலில் 4 நாடுகள் கூட்டு கடற்படை பயிற்சி

    வங்காள விரிகுடா கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் கூட்டு கடற்படை பயிற்சி தொடங்கியது.
    விசாகப்பட்டினம்:

    இந்தியா, அமெரிக்கா கடற்படைகளுக்கு இடையே 1992-ம் ஆண்டு முதல், மலபார் கூட்டு கடற்படை பயிற்சி நடந்து வருகிறது. 2015-ம் ஆண்டு முதல் இந்த பயிற்சியில் ஜப்பானும் தன்னை இணைத்துக்கொண்டது. ஆஸ்திரேலியாவும் இந்த பயிற்சியில் சேர விரும்பியது. இதையடுத்து ஆஸ்திரேலியாவும் மலபார் கூட்டு கடற்படை பயிற்சியில் சேருவதாக இந்தியா கடந்த மாதம் அறிவித்தது.

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் ‘குவாட்’ என்ற அமைப்பின்கீழ் ஏற்கனவே ஒன்றுபட்டு இயங்கி வருகின்றன.

    இந்த நிலையில் இந்த 4 நாடுகளின் கடற்படை பயிற்சியின் முதல் கட்டம் விசாகப்பட்டினத்தில் வங்காள விரிகுடா கடலில் நேற்று தொடங்கியது. இது 6-ந் தேதி முடிகிறது.

    இரண்டாவது கட்ட பயிற்சி, அரபிக்கடலில் 17-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிகிறது.

    இந்த கூட்டு கடற்படை பயிற்சியில் இந்திய தரப்பில், நாசகார போர்க்கப்பல் ரன்விஜய், போர் கப்பல் சிவாலிக், ரோந்து கப்பல் சுகன்யா, கடற்படை ஆதரவு கப்பல் சக்தி, நீர்மூழ்கி கப்பல் சிந்துராஜ், மேம்பட்ட பயிற்சி கப்பல் ஹாக், நீண்ட தொலைவு கடல் ரோந்து விமானம் பி-81, டோர்னியர் கடல் ரோந்து விமானம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    அமெரிக்க தரப்பில் யு.எஸ்.எஸ். ஜான் எஸ்.மெக்கைன் போர் கப்பல், ஆஸ்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ். பல்லாரத் போர் கப்பல், எம்.எச்.-60 ஹெலிகாப்டர், ஜப்பான் தரப்பில் ஜே.எஸ்.ஒனாமி நாசகார கப்பல் போன்றவை பயிற்சியில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிரானவை, இவை ஒன்றுபட்டு கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு இருப்பது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்த இயலாமல் தவிக்கிறது.

    இந்த கூட்டு கடற்படை பயிற்சி பற்றி பீஜிங்கில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “தொடர்புடைய 4 நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உகந்ததாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என பதில் அளித்தார்.
    Next Story
    ×