search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பீகார் தேர்தலில் போட்டியிடும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் குற்ற பின்னணி கொண்டவர்கள்

    பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குற்ற பின்னணி உடையவர்கள் என தெரியவந்திருக்கிறது.
    புதுடெல்லி:

    பீகார் சட்டப்பேரவையின் 243 இடங்களுக்கான தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 71 இடங்களுக்கான முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம் 28-ந் தேதி நடைபெற்றது. 94 இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் இன்றும், மீதமுள்ள 78 இடங்களுக்கான தேர்தல் வருகிற 7-ந் தேதியும் நடைபெறும். தேர்தல் முடிவுகள் வருகிற 10-ந் தேதி வெளியாகும்.

    இந்நிலையில், ‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்’ என்ற அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இத்தேர்தலில் போட்டியிடும் ஆயிரத்து 200 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகளும், 115 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும், 73 பேர் மீது கொலை வழக்குகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த தேர்தலில் போட்டியிடும் 3 ஆயிரத்து 722 பேரை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதில், 32 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

    இவர்களில் 349 வேட்பாளர்கள் தேசிய கட்சிகளையும், 470 பேர் மாநில கட்சிகளையும், ஆயிரத்து 607 பேர் பதிவுபெற்ற ஆனால் அங்கீகாரம் பெறாத கட்சிகளையும் சேர்ந்தவர்கள். ஆயிரத்து 296 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.

    மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 89 சதவீத தொகுதிகள், அதாவது 217 தொகுதிகள் சிவப்பு எச்சரிக்கைக்கு உரிய தொகுதிகளாக உள்ளன. அதாவது அங்கு போட்டியிடும் வேட்பாளர்களில் 3 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    கடந்த 2015 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 3 ஆயிரத்து 450 பேரை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டபோது, ஆயிரத்து 38 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. இது மொத்த வேட்பாளர்களில் 30 சதவீதம் ஆகும்.

    தற்போதைய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 915 பேர், அதாவது 25 சதவீதத்தினர், கடுமையான குற்ற வழக்குகளுக்கு உட்பட்டவர்கள். முந்தைய தேர்தலில் அந்த எண்ணிக்கை 796 ஆக இருந்தது. அதாவது 23 சதவீதம் பேர்.

    ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகத்தின் நிறுவன உறுப்பினரும், அறங்காவலருமான ஜெகதீப் சோக்கர் இதுகுறித்து கூறும்போது, “பீகார் தேர்தலில் அனைத்து பெரிய கட்சிகளுமே குற்ற பின்னணி உடைய 37 முதல் 70 சதவீத வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கின்றன.

    குற்ற வழக்கு இல்லாத மற்றவர்களை விடுத்து, குற்ற பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்வது ஏன் என்று அரசியல் கட்சிகள் விளக்கம் அளிக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் அதற்கு கட்சிகளோ, வழக்குகள் அரசியல்ரீதியாக தொடுக்கப்பட்டவை என்பது போன்ற பொய்யான விளக்கங்களையே அளிக்கின்றன.

    கிடைத்திருக்கும் புள்ளிவிவரங்கள், தேர்தல் நடைமுறையை சீர்திருத்துவதில் அரசியல் கட்சிகளுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதையே காட்டுகின்றன. சட்டத்தை மீறுபவர்களே சட்டத்தை உருவாக்குபவர்களாக மாறும் நிலையில், இதனால் தொடர்ந்து பாதிக்கப்பட போவது நமது ஜனநாயகம்தான்” என்றார்.

    பீகார் தேர்தலில் போட்டியிடும் 33 சதவீதம் பேர் (1,231) கோடீஸ்வரர்கள் ஆவார்கள். இது கடந்த தேர்தலில் 25 சதவீதமாக (860) இருந்தது. தற்போதைய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.1.72 கோடி ஆகும்.
    Next Story
    ×