search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.சி.பட்டீல்
    X
    பி.சி.பட்டீல்

    சித்தராமையா, பாஜகவுக்கு வந்தால் உற்சாகமாக வரவேற்போம்: மந்திரி பி.சி.பட்டீல்

    காங்கிரஸ் தலைவர்களுக்குள் பனிப்போர் நடக்கிறது என்றும், சித்தராமையா பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம் என்றும் மந்திரி பி.சி.பட்டீல் தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    பீகார் சட்டசபை தேர்தல் முடிந்த பின்பு முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். மேலும் முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா இன்னும் 2½ ஆண்டுகள் நீடிப்பது கடினம் என்றும் அவர் கூறி இருந்தார். சித்தராமையாவின் இந்த கருத்துக்கு பா.ஜனதாவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கொப்பலில் நேற்று மந்திரி பி.சி.பட்டீலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;-

    முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. எடியூரப்பாவை மாற்றுவது தொடர்பாக பா.ஜனதாவில் எந்த விதமான பேச்சும் இதுவரை நடக்கவில்லை. இன்னும் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா இருப்பார். இடைத்தேர்தலில் மக்களை திசை திரும்பும் நோக்கத்தில் எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து மாற்ற போவதாக சித்தராமையா கூறி வருகிறார். இதனை மாநில மக்கள் நம்ப மாட்டார்கள். சித்தராமையா முதலில் காங்கிரசில் இருக்கும் உட்கட்சி மோதலுக்கு தீர்வு காணட்டும்.

    அதன்பிறகு, பா.ஜனதாவில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து பேசட்டும். அரசியலில் இருந்து சித்தராமையாவை ஓரங்கட்ட டி.கே.சிவக்குமார் திட்டமிடுகிறார். டி.கே.சிவக்குமாரை ஓரங்கட்ட சித்தராமையா திட்டமிடுகிறார். காங்கிரஸ் கட்சிக்குள் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன.

    காங்கிரஸ் தலைவர்களுக்குள் மறைமுகமாக பனிப்போர் நடந்து வருகிறது. அதனால் பா.ஜனதா குறித்து சிந்தித்து சித்தராமையா தலைவலியை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம். சித்தராமையா பா.ஜனதாவுக்கு வந்தால், அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்படும். எடியூரப்பா குறித்து பேசிய பசனகவுடா பட்டீல் யத்னால் குறித்து பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×