search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விமான பயணத்தில் முக கவசம் அகற்றினால் கொரோனா ஆபத்து

    விமான பயணத்தில் சாப்பிடும்போது முக கவசத்தை அகற்றினால், அதுவும் கொரோனா பரவும் ஆபத்தை அதிகரிக்கிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    கொரோனாவுக்கு எதிராக உலகமே போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில், அது பற்றிய உலகளாவிய ஆய்வுகளும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.

    விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், விமான தயாரிப்பாளர்கள் சார்பில், அமெரிக்காவின் ஹார்வர்டு டி.என்.சான் பொது சுகாதார கல்லூரி விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தி உள்ளனர்.

    இந்த ஆய்வில், விமானங்களில் உள்ள காற்றோட்ட அமைப்பு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கிறது. அது காற்று வினியோகத்தை புதுப்பிக்கிறது. அப்போது கொரோனா வைரசை ஏற்படுத்துகிற 99 சதவீத நுண்ணிய துகள்களை அது வடிகட்டி விடுகிறது என தெரிய வந்துள்ளது.

    ஆனால் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப நிறுவனத்தின் அர்னால்டு பேர்னட் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் மாறுபட்ட கருத்தை தெரிவிக்கிறார்கள்.

    இது தொடர்பாக அர்னால்டு பேர்னட் கூறும்போது, “வைரஸ் பரவுதல் என்பது ஒரு பயணியின் சுவாசம், பேசுதல், இருமல் அல்லது தும்மல் ஆகியவற்றின் மூலம் உமிழ்வதைப் பொறுத்தது, ஒரு நபருக்கு நபர் மாறுபடும் ஒரு கலவை. அத்துடன் விமானத்தின் வடிவியலைப் பொறுத்து சுவாச துளிகள், காற்று துகள்கள் இயக்கம் மாறுபடும். அப்படிப்பார்த்தால் கொரோனா வைரசின் எந்த செயல்முறைகளும் முழுமையாக புரிந்து கொள்ளப் படவில்லை” என்றுகூறி உள்ளார்.

    ஹார்வர்டு மருத்துவ கல்லூரி பேராசிரியர் அப்ரார்கரன், “விமானங்கள் சிறந்த காற்றோட்ட அமைப்புகளை கொண்டிருந்தாலும், அதில் பயணிப்பவர்களில் எத்தனை பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என்பது தெரியாது. இதை கண்டுபிடிக்க சரியான வழியை நாங்கள் இன்னும் சோதிக்கவில்லை” என்று கூறி உள்ளார்.

    ஹார்வர்டு டி.என்.சான் பொது சுகாதார கல்லூரியின் ஜஸ்டின் யாங் கூறுகையில், “கொரோனா ஆபத்து சூழ்நிலைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, அந்தந்த அமைப்புகளில் தனி மனித இடைவெளி மற்றும் முக கவசம் அணியும் நடவடிக்கைகள் போதுமான அளவு செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும். எங்கள் குழுவின் மதிப்பாய்வு செய்யப்படாத ஆய்வு, வணிக விமானங்களில் தரப்படுகிற உணவை சாப்பிடும்போது முக கவசங்களை அகற்றுவது, பயணிகள் வைரசால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று காட்டுகிறது. ஒருவர் 2 மணி நேர விமான பயணத்தின்போது, தனது முக கவசத்தை 20 நிமிடங்கள் அகற்றினால், அது கொரோனா பரவும் ஆபத்தை 33 சதவீதம் அதிகரிக்கிறது” என்கிறார்.

    மேலும் அவர் கூறும்போது, “முக கவசமானது கொரோனா பரவல் ஆபத்தை மூன்றில் 2 பங்கு குறைக்கிறது” என்று சுட்டிக்காட்டுகிறார்.

    மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், மளிகைக்கடை, ஓட்டல்கள், விமானங்கள் என ஒவ்வொரு இடத்திலும் முக கவசம் அணிவதின் நன்மையை பெற முடியும் என்கிறார்கள்.

    ஆக, கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரையில் முக கவசமே கூட தடுப்பூசி போல கொரோனாவில் இருந்து நம்மை காக்கிறது.
    Next Story
    ×