search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவன்
    X
    சிறுவன்

    வீட்டுப்பாடத்தை ஆசிரியையிடம் காண்பிக்க 40 கிலோ மீட்டர் தூரம் பயணித்த சிறுவன்

    தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா எர்ரேபுதிஹால் கிராமத்தை சேர்ந்த பவன் காந்தி என்ற சிறுவன் 40 கிலோ மீட்டர் சென்று பாடம் படித்து வருவதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    தார்வார் :

    கொரோனா பாதிப்பு காரணமாக கர்நாடகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. செல்போன், இணையதள வசதி இல்லாததால் கிராமப்புற மாணவர்கள் ஆன்-லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அதுபோல் தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா எர்ரேபுதிஹால் கிராமத்தை சேர்ந்தவன் பவன் காந்தி (வயது 8). இவன் உப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தான்.

    இவனது தாய் மாற்றுத்திறனாளி ஆவார். தந்தை கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இதனால் ஆன்-லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் சிறுவன் பவன் காந்தி சிரமப்பட்டான். இதையடுத்து கடந்த மாதம் தனது தாயுடன் உப்பள்ளி சென்று ஆசிரியை அனுசுயா சஜ்ஜன் என்பவரிடம் பாடம் படிக்க சென்றான். அப்போது ஆசிரியை, பவன்காந்திக்கு பாடம் நடத்தினார்.

    மேலும் அவனுக்கு வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார். அதனை வீட்டில் இருந்தபடி பவன் காந்தி எழுதி முடித்தார். இதை தனது ஆசிரியையிடம் காட்டுவதற்காக நேற்று பவன்காந்தி, தனது தாயுடன் 40 கிலோ மீட்டர் தூரம் பயணித்து உப்பள்ளிக்கு சென்று ஆசிரியையை சந்தித்து காண்பித்தான். அவனை ஆசிரியை அனுசுயா சஜ்ஜன் பாராட்டினார். ஏழை குடும்பத்தை சேர்ந்த சிறுவன், 40 கிலோ மீட்டர் சென்று பாடம் படித்து வருவதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×