search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் கமிஷன்
    X
    தேர்தல் கமிஷன்

    பீகாரில் இலவச கொரோனா தடுப்பூசி : தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை - தேர்தல் கமிஷன் அறிவிப்பு

    பீகாரில் பா.ஜ.க. வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என்ற பா.ஜ.க.வின் வாக்குறுதி, நடத்தை விதிகளை மீறிய செயல் அல்ல என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை இந்த மாத தொடக்கத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

    அதில், பீகாரில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

    இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. ஆளும் பா.ஜ.க. கொரோனா வைரஸ் பெருந்தொற்றை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவதாக அவை குற்றம் சுமத்தின. குறிப்பாக ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாடி, தேசிய மாநாடு கட்சிகள், பீகாரில் கொரோனா தடுப்பூசி பற்றிய பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி குறித்து கேள்விகள் எழுப்பின. இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குவதாகவும் குறை கூறின.

    ஆனால் சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் வருகிறது, தேர்தல் வாக்குறுதி பீகார் மாநிலத்திற்குத்தான், அது ஒட்டுமொத்த நாட்டுக்கு உரியது அல்ல என்று பா.ஜ.க. பதில் அளித்தது.

    இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர் சாக்கெட் கோகலே என்பவர் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தார்.

    இந்த வாக்குறுதி பாரபட்சமானது, தேர்தல்களின்போது மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு அதிகாரங்களை தவறாக பயன்படுத்துகிறது என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு தேர்தல் கமிஷன் பதில் அளித்துள்ளது. அதில், “கொரோனா தடுப்பூசி பற்றிய தேர்தல் வாக்குறுதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் அல்ல” என கூறி உள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகள் பகுதி 8-ல் உள்ள தேர்தல் அறிக்கைகளுக்கான சில வழிகாட்டுதல்களை தேர்தல் கமிஷன் மேற்கோள் காட்டி உள்ளது.

    ஒரு பிரிவில், அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாநில கொள்கைகளின் வழிநடத்தும் விதிமுறைகள், பொதுமக்களுக்கான பல்வேறு நல நடவடிக்கைகளை வகுக்குமாறு அரசுக்கு கட்டளையிடுகின்றன. எனவே தேர்தல் அறிக்கையில் இத்தகைய நலன் தொடர்பான வாக்குறுதியை வழங்குவதில் எந்த ஆட்சேபமும் இருக்க முடியாது” என கூறப்பட்டுள்ளது.

    மற்றொரு விதி, நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகள் மீது மட்டுமே வாக்காளர்களின் நம்பிக்கையை கட்சிகள் நாட வேண்டும் என்று கூறுவதையும் தேர்தல் கமிஷன் சுட்டிக்காட்டி இருக்கிறது.
    Next Story
    ×