search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)
    X
    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

    கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஒருங்கிணைக்க குழுக்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

    கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதற்கான பணிகளை ஒருங்கிணைக்க பல்வேறு குழுக்களை அமைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிப்பது முழுவீச்சில் நடந்து வருகிறது.

    அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசிகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.

    இந்த தடுப்பூசிகள் போடுவதற்கான பணிகள் குறித்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்.

    தடுப்பூசியை மக்களுக்கு அறிமுகம் செய்து போடும் பணி ஒரு வருடத்துக்கு மேலாக நீடிக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் தடுப்பூசி போடுவதற்கான ஆயத்தங்களை சுமுகமாக செய்து முடிப்பதற்கு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    குறிப்பாக தடுப்பூசிகளை பாதுகாக்க குளிர்பதன வசதி, தடுப்பூசி போடுவதற்கான செயல்பாடுகளை திட்டமிடல், கடினமான சவாலான இடங்களுக்கும் தடுப்பூசி போய்ச்சேருவதற்கான உத்திகள் வகுத்தல் போன்ற பணிகளை செய்வதற்கு இந்த குழுக்கள் உதவும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    மாநில அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் வழிகாட்டும் குழுவும், கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் மாநில பணிக்குழுவும், மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட குழுக்கள் அமைக்கவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பரிந்துரை செய்துள்ளார்.

    கொரோனா தடுப்பூசியை மக்கள் ஏற்றுக்கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்துகிற வகையில் அது பற்றிய தவறான தகவல்களையும், வதந்திகளையும் சமூக ஊடகங்கள் பரப்பி விடாமல் முன்கூட்டியே கண்காணிப்பதை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தடுப்பூசி பணியை மாவட்ட, வட்டார, நகர வார்டு அளவில் திறம்பட செய்து முடிக்கிறவர்களுக்கு தகுந்த பரிசு, அங்கீகாரம் அளிப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துமாறு மாநில அளவிலான வழிகாட்டும் குழுவுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

    தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தயாராக கிடைக்கிறபோது, மாநில பணிக்குழு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறிப்பாக வழிகாட்டுதல், நிதி அளித்தல், செயல்பாட்டு வழிமுறைகள் வழங்குதல், காலவரையறை நிர்ணயம் செய்தல் போன்றவை குறித்தும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட அளவிலான குழுக்கள், பயனாளிகள் பற்றிய தகவல்களை சரிபார்த்தல், தடுப்பூசி போடும் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல், தகவல் பரிமாற்றம், தடுப்பூசிகளை பாதுகாக்க குளிர்பதன வசதி ஏற்படுத்துதல் போன்றவற்றையும் கவனிக்க வேண்டியதிருக்கிறது.

    தடுப்பூசிக்கு எதிரான வதந்திகள், தவறான தகவல்கள் வருகிறபோது அவற்றை முறியடித்தல், தடுப்பூசி ஆர்வத்தை நிவர்த்தி செய்தல், நகர்ப்புறங்களில் தடுப்பூசி செயல்பாடுகளுக்கான கால கெடுவை நிர்ணயித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளையும் கவனிக்க ஏற்றதகவல் தொடர்புகளுக்கும் மாவட்ட அளவிலான குழுக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×